என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூடிஎஸ் செயலி"

    • ரெயில்களில் பயணம் செய்யும்போது உணவு ஆர்டர் செய்ய வசதி இல்லாமல் இருந்தது.
    • முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செயலி வருகிற 1-ந் தேதி முதல் செயலிழக்கப்பட உள்ளது.

    ரெயில்களில் சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செல்போன் செயலி வருகிற 1-ந் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ரெயில்வே துறையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் ரெயில் நிலையத்திற்கு நேரில் சென்று டிக்கெட் எடுக்கவும், வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்யும் நிலை இருந்தது. தற்போது அனைத்தும் செல்போனில் இருந்தபடி மேற்கொள்ளும் வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் நவீன தொழில்நுட்பம் ரெயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

    முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் எந்திரங்கள் ரெயில் நிலையங்களில் வைக்கப்பட்டன. பின்னர் யூ.டி.எஸ். என்ற செல்போன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி வந் தது. பயணம் செய்யும் ரெயில் எந்த ரெயில் நிலையத்தில் உள்ளது. எங்கு வந்து கொண்டுள்ளது என்பதை அறிவதற்காக என்.டி.இ.எஸ். என்று சொல்லப்படும் தேசிய ரெயில் விசாரணை சேவை இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான புகார்கள் குறித்து டிக்கெட் பரிசோதகர் அல்லது ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டரிடம் புகார் அளிக்கும் நிலை இருந்தது. தற்போது ரெயில் மதாத் எனப்படும் இணைய தளம், செல்போன் செயலி மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி கொண்டு வரப்பட்டது. ரெயில்களில் பயணம் செய்யும்போது உணவு ஆர்டர் செய்ய வசதி இல்லாமல் இருந்தது.

    தற்போது டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அந்த சேவையையும் பெற முடியும். இவ்வாறாக பயணிகளுக்கான அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முன்பதிவு டிக்கெட், சாதாரண டிக்கெட், குறைகளை பதிவு செய்ய, புகார் தெரிவிக்க, இருந்த இடத்திலேயே உணவு பெற, சலுகை கட்டண டிக்கெட் ஆகிய அனைத்து சேவைகளும் ரெயில் ஒன் என்ற செயலி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த செயலி கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகளுக்கான அனைத்து சேவைகளும் இந்த செயலி மூலம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செயலி வருகிற 1-ந் தேதி முதல் செயலிழக்கப்பட உள்ளது. அதாவது யூ.டி.எஸ். செயலி ஒவ்வொரு கட்டமாக செயலிழக்க செய்யப்பட உள்ளது. முதலில் புதிதாக சீசன் டிக்கெட் பெறுவது, சீசன் டிக்கெட் புதுப்பித்தல், புதிய பதிவு ஆகியன 1-ந் தேதிக்கு பின்னர் செய்ய முடியாது. தொடர்ந்து பிளாட்பாரம் டிக்கெட் பெறுவது, ஆர்-வாலட் என்று சொல்லப்படும் பதிவு செய்த பயணியின் கணக்கில் உள்ள தொகையை ரீ-சார்ஜ் செய்வது ஆகியன நிறுத்தப்படும். படிப்படியாக மேற்கொள்ளப் டும் இந்த மாற்றங்கள் முழுமையடையும் வரை பிளே ஸ்டோரில் இந்த செயலி செயல்பாட்டில் இருக்கும்.

    ஆர்-வாலட்டை பொறுத்தமட்டில், மின்சார ரெயில்கள், பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட தொகையை பிரிபெய்ட் போல ரீ-சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரெயில் ஒன் செயலிக்கு மாறும் போது அவர்கள் கணக்கில் உள்ள ஆர்-வாலட் தொகை அப்படியே இருக்கும். அந்த தொகையை பயணிகள் ரெயில் ஒன் செயலியில் பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே அனைத்து பயணிகளும் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 2½ கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    • யூ.டி.எஸ். செயலியில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மூலமாக ரூ.24.82 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    சென்னை :

    தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய செல்போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. ரெயில் பயணிகளின் சவுகரியங்களை கருத்தில்கொண்டும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னிறுத்தும் வகையிலும் 'யூ.டி.எஸ்.' செயலி மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த செயலியை பயன்படுத்தி, முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் எடுக்கலாம். மேலும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளையும் புதுப்பிப்பதற்கான வசதி நாடு முழுவதும் இருக்கிறது. ஆண்டிராய்டு, ஐ.ஓ.எஸ்., வின்டோஸ் போன்களிகளில் 'யூ.டி.எஸ்.' செயலியை எளிதாக பதிவிறக்கம் செய்து காகிதம் மற்றும் காகிதம் இல்லா பயன்பாடு முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலான 10 மாதத்தில் யூ.டி.எஸ். செயலியை பயன்படுத்தி டிக்கெட் எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் 50.75 லட்சம் டிக்கெட்டுகள் யூ.டி.எஸ். செயலி மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 2.51 கோடி முன்பதிவு அல்லாத பயணிகள், வரிசையில் காத்து நிற்காமல் டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளனர்.

    இதேபோல, கடந்த 10 மாத காலத்தில் யூ.டி.எஸ். செயலியில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மூலமாக ரூ.24.82 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கியூ.ஆர்.கோடு மூலம் ஸ்கேன் செய்து டிக்கெட் எடுக்கும் வசதி, பயணிகள் புறப்படவேண்டிய ரெயில்நிலையத்தின் 15 மீட்டர் தொலைவில் இருந்து டிக்கெட்டுகளை எடுக்கும் வசதி உள்பட பல்வேறு அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    காகிதம் மற்றும் காகிதம் அல்லாத யூ.டி.எஸ். டிக்கெட்டுகளை முந்தைய நாளுக்கு எடுக்கமுடியாது. பயணம் செய்யும் அன்றையதினமே எடுக்கவேண்டும். குறிப்பாக டிக்கெட் எடுத்த 1 மணி நேரத்துக்குள் பயணம் செய்யவேண்டும். டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது, டிக்கெட்டுகளை காண்பிக்காத பட்சத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக கருதப்படும்.

    இதேபோல டிக்கெட் எடுப்பதற்காக கூட்டநெரிசல் மிகுந்த நேரங்களில் டிக்கெட் மையங்களில் வரிசையில் காத்து நிற்பதை தவிர்ப்பதற்காக பயணிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய, பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க மற்றும் சீசன் டிக்கெட்டுகளை புதுப்பிப்பதற்காக யூ.டி.எஸ். செயலியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×