என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கோரிக்கை வைத்தார்.
- இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகைகள் 'ராஜ் பவன்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை 'ராஜ் நிவாஸ்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.
இதனையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, 'மக்கள் மாளிகை தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பெ.சண்முகம், "கொடிய விஷமுள்ள பாம்புக்குகூட நல்ல பாம்பு என்றுதான் பெயர். நல்ல பாம்பு என்று சொல்வதால் அதற்கு விஷமில்லை என்று அர்த்தம் இல்லை. ராஜ் பவனை மக்கள் பவன் என மாற்றியதால் அவர்கள் குணம் எல்லாம் மாறிவிட்டது என்ற முடிவுக்கு வர முடியாது" என்று தெரிவித்தார்.
- தேர்தல் கமிஷன் பதிவுகளின்படி, பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் 1-8-2026 வரை செல்லுபடியாகும்.
- கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
பா.ம.க. தலைவர் பதவி தொடர்பாக ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இரு தரப்பில் இருந்தும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வந்தனர். பல கடிதங்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, பா.ம.க.வின் தலைவராக அன்புமணி ராமதாசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி வரை செல்லுபடியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அன்புமணி ராமதாசின் பதவிக்காலம் கடந்த 28-5-2025 அன்று காலாவதியாகிவிட்டது என்றும், புதிய தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், 30-5-2025 முதல் ராமதாஸ் கட்சியின் புதிய தலைவராக இருப்பதாகவும் கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் தேர்தல் கமிஷன் பதிவுகளின்படி, பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் 1-8-2026 வரை செல்லுபடியாகும். மேலும் அன்புமணி ராமதாசே கட்சியின் தலைவராக உள்ளார்.
ராமதாஸ் கட்சியின் தலைவராக இருப்பதாகக் கூறினால், கட்சியின் நிர்வாகிகள் தொடர்பான விஷயத்தைத் தீர்க்க பொருத்தமான கட்சி அமைப்பு அல்லது தகுதி வாய்ந்த நீதிமன்றத்தை அணுகிக்கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் ராமதாஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது தரப்பில் இருந்து கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
இந்நிலையில், பா.ம.க.வை மீட்க அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குழு அமைத்துள்ளார். குழுவில் ஜி.கே.மணி, சதாசிவம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
அன்புமணியிடம் இருந்து பா.ம.க.வை மீட்க ராமதாஸ் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு உள்ளது.
- 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழை தொடரும்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 250 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
இந்நிலையில் 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
அதன்படி, இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.58 மணிக்கு தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை 5.37 மணிக்கு முடிகிறது. அந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.
- மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா நாளை நடைபெற உள்ளது.
அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு ஆனந்த நடனத்துடன் எழுந்தருள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
நாளை முதல் 11 நாட்களுக்கு அண்ணாமலை உச்சியில் சிவபெருமான் தீப்பிழம்பாய் காட்சி தருவார். திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.
அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.
மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலையை வலம் வருவதற்காகவும், மகா தீபத்தை தரிசிக்கவும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 15 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர்.
கிரிவலப்பாதையில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர கால உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதையை தூய்மையாக பராமரிக்க ஆயிரத்து 200 தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதை அரசு கலைக்கல்லூரி அருகில் மாட்டு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. மாட்டு சந்தையில் மாடுகள், குதிரைகள், ஒட்டகம் ஆகியவை விற்பனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
தீப தரிசனம் காண திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 பிரதான சாலைகள் வழியாகவும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
- கண்டமனூர் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்கிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.45 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 1600 கன அடி.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. சற்று மழை ஓய்ந்த நிலையில் டிட்வா புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு, அய்யனார்கோவில், டானா தோட்டம் போன்ற பகுதிகளில் பெய்த மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கண்டமனூர் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. எனவே கண்டமனூர் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்கிறது. எனவே பொதுமக்கள் யாரும் தடுப்பணையில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என்றும், கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீர் வரத்து அதிகரிப்பால் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 63.29 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1740 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1319 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4262 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.45 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6987 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் நீடிப்பதால் அணைக்கு வரும் 83 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடி. வரத்து 57 கன அடி. சண்முகாநதி அணை நீர்மட்டம் 43.10 அடி. வரத்து 17 கன அடி. திறப்பு 14.17 கன அடி.
- வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது.
இதனால் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,040-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
நேற்று அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
01-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,560
30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
29-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
28-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
27-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
01-12-2025- ஒரு கிராம் ரூ.196
30-11-2025- ஒரு கிராம் ரூ.192
29-11-2025- ஒரு கிராம் ரூ.192
28-11-2025- ஒரு கிராம் ரூ.183
27-11-2025- ஒரு கிராம் ரூ.180
- அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு உள்ளது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
சென்னை அருகே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரில் இருந்து 150 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 130 கி.மீ., நெல்லூருக்கு 180 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 250 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில் மெட்ரோ ரெயில் பழுதாகி நின்றது.
- சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மெட்ரோ ரெயில் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி வந்த மெட்ரோ ரெயில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில் மெட்ரோ ரெயில் பழுதாகி நின்றது. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் திடீரென பழுதாகி நின்றதால் பயணிகள் பீதியடைந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த தொழில்நுட்ப நிபுணர்கள் கோளாறை சரி செய்தனர். இதன்பின் மெட்ரோ ரெயில் சேவையானது சீரானது.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மெட்ரோ ரெயில் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
- சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.
- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 160, புதுச்சேரியில் இருந்து 140 , நெல்லூருக்கு 170 கி.மீ தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலவுகிறது. மேலும் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 35 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் பல மணி நேரமாக மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது.
சென்னை அண்ணாசாலை, மெரினா, சாந்தோம், மயிலாப்பூர், எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலையில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ., பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது.
- நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்கிறது.
- தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி வருகின்றனர்.
சென்னை:
சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் பல மணிநேரமாக மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனை தொடர்ந்து நேற்று மாலைக்கு மேல் சற்று இடைவெளி விட்ட மழை நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






