என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • நேற்று கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான நேற்று கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,890-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120-க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்குப்போட்டியாக நேற்று உயர்ந்த வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880

    22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    21-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    20-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    19-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-02-2026- ஒரு கிராம் ரூ.300

    22-02-2026- ஒரு கிராம் ரூ.290

    21-02-2026- ஒரு கிராம் ரூ.290

    20-02-2026- ஒரு கிராம் ரூ.270

    19-02-2026- ஒரு கிராம் ரூ.270

    • இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை தெற்கு மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி டேவிட் என்பவரின் படகில் இருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்திருப்பது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 21-ந் தேதி மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று பாம்பன் மீனவர்கள் கைதை கண்டித்து இன்று பாம்பனில் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாம்பன் துறைமுகம், மீன்பிடி இறங்கு தளங்களில் 100-க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. திடீர் வேலைநிறுத்தம் காரணமாக பாம்பனில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. இதனால் எங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தை உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    • இந்து கோவில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடாது என்பது தி.மு.க.வினுடைய ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
    • ஆன்மிக சக்தியை எந்த ஒரு அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

    கோவையில் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் கூட மாநில அரசு அந்த உத்தரவை நிறைவேற்றாமல் வேண்டுமென்றே எந்தவித முகாந்திரமும் இல்லாமல் அதை தடுத்து நிறுத்தினார்கள்.

    சட்டம் ஒழுங்கு என்ற ஒரு பொய் காரணத்தை சொல்லி தீபத் திருநாள் அன்று தீபம் ஏற்றுவதை தடுத்தது இந்த தி.மு.க. அரசு.

    தமிழகம் எப்போதும் தெய்வீக மண். இங்கு இருக்கக்கூடிய கோவில்கள், இறை தெய்வங்கள், கோவிலையொட்டி இருக்கக்கூடிய கலாச்சாரம், பண்பாடு எல்லாம் தான் தமிழர்களுடைய அடையாளம்.

    தமிழ்நாடு என்றாலே ஒரு கோபுர சின்னத்தை வைத்தது நம் முன்னோர்கள். கோபுர சின்னம் கோவிலின் அடையாளம் என்பதை தாண்டி அது தமிழகத்தின் அடையாளமாகவே இருந்து கொண்டிருக்கிறது.

    அப்படிப்பட்ட தமிழர்களுடைய அடையாளத்தை அழிக்கின்ற விதமாக திராவிட மாடல் தி.மு.க. அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஒன்று தான் திருப்பரங்குன்றத்தில நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாமல் போனதற்கு காரணம். நீதிமன்றத்தில் போய் வெட்கமில்லாமல் மன்னிப்பு கேட்டது தி.மு.க. அரசு. அவர்களுடைய நோக்கம் என்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும். இந்து கோவில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடாது என்பது தி.மு.க.வினுடைய ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.

    ஆன்மிக சக்தியை எந்த ஒரு அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

    ஊழல்வாதிகளை மிரட்டி தான் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளாரே?

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய அமைச்சரவையில் உள்ள கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு எத்தனை மாதம் ஆகிறது. அதெல்லாம் ஊழலாக தெரியவில்லையா?

    அமைச்சரவையில் ஊழல் அமைச்சர்களை வைத்துக்கொண்டு, ஊழல் வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கக்கூடிய அமைச்சர்களை வைத்துக்கொண்டு, ஊழல் குற்றச்சாட்டிற்காக ஒரு சிட்டிங் அமைச்சரை வீட்டுக்கு அனுப்பிய பெருமைக்குரியவர் முதலமைச்சர் ஸ்டாலின்.

    தி.மு.க. கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி என்று விஜய் கூறியிருக்கிறாரே?

    விஜய் எந்தவிதமாக புதுபுது வார்த்தைகள் வைத்து பேசினாலும் அல்ட்டிமேட்டா தி.மு.க.வை வீழ்த்தப்போவது தேசிய ஜனநாயக கூட்டணிதான். அதனால் மேடை ஏறலாம். வசனம் பேசலாம். கூட்டத்தை கூட கூட்டிக்காட்டலாம். ஆனால் வாக்குகள் விழுவது என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான். ஏனென்றால் அவர்களை வீழ்த்த முடிகின்ற சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம்.
    • திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழகத்தையும், தமிழக மக்களையும் அரண்போல காத்திட்ட அன்புத் தாய், சிந்தனைகளாலும், நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம், திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி நீங்கா புகழோடு எந்நாளும் நிலைத்து நிற்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினம் இன்று.

    இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திட, உழவர்களுக்கான வேளாண் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கிட, தொழில்துறையில் முதலிடத்தை அடைந்திட, தமிழகத்தை இந்திய தேசத்தின் அறிவுசார் தலைநகரமாக உயர்த்திட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களையும், மக்கள் நலனுக்காக அவர் நிகழ்த்திட்ட அற்புதங்களையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.
    • "நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இதயதெய்வம் புரட்சித் தலைவி "அம்மா" அவர்களின் 78வது பிறந்த நாளில், அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம்,

    "அம்மா" எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை,

    பெண்களின் தைரியம்,

    தாய்மையின் உருவம்.

    அதிகாரம் அவரை உயர்த்தவில்லை;

    மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது.

    புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், "Poverty Alleviation" -க்கான Global standards -சை நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது.

    சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.

    We Take a leaf out of your book in all

    of our actions for the people Amma

    'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன்னதைப் போல, அ.தி.மு.க. என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.

    "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள்.

    அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள்.

    அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து,

    கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம்.

    "நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்"

    வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்!

    வளர்க புரட்சித் தலைவி அம்மாவின் பெரும் புகழ்!

    வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! என்று கூறியுள்ளார். 



    • எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • வார நாட்களில் இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி- தாம்பரம் ரெயில் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த 10வது, 11வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால் கடந்த 20-ந்தேதியில் இருந்து 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 நாட்களாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பொதுமக்கள் சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. புறநகர் மின்சார ரெயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதலாக பஸ் சேவை அளிக்கிறது. குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரெயில் சேவை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் காரணமாக 204-ஆக இருந்த ரெயில் சேவைகள் 164-ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 115-ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, எழும்பூர்- பரங்கிமலை, எழும்பூர்- கூடுவாஞ்சேரி, எழும்பூர்- செங்கல்பட்டு இடையே கட் சர்வீஸ் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் ரெயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரில் இருந்து செல்லும் ரெயில்கள் சேத்துபட்டு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் நிற்காது. எழும்பூருக்கு வரும் போது பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துபட்டில் நிற்காது. வார நாட்களில் இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி- தாம்பரம் ரெயில் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.
    • போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது.

    இந்த திருத்தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஜனாதிபதி வெங்கட்ராமன் சாமி தரிசனம் செய்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் வாசல் வழியாக சென்ற அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் காரில் இருந்தபடி தரிசனம் செய்தார்.

    இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். இதையொட்டி அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதை முன்னிட்டு கோவில் வாசலில் இருந்து கருவறை வரையிலும் அதிகாரிகள் பார்வையிட்டு உள்ளனர். கருவறைக்கு முன்னதாக உள்ள மகாமண்டபத்தின் படிக்கட்டுகளில் பிரதமர் ஏறி கருவறைக்கு எளிதாக சென்று வர வசதியாக படிக்கட்டுகளை சீரமைப்பது குறித்தும் கோவில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இன்று போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் வரை கோவிலில் பிரதமர் தரிசனம் செய்துவிட்டு திரும்புவார் எனவும் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஓரிருநாளில் தெரிய வரும் என கூறப்படுகிறது.

    • காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கலைச்செல்வி பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஐ.ஏ.எஸ் அதிகாரியான சண்முக சுந்தரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    * காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கலைச்செல்வி பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * பொருளியல், புள்ளியியல் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயா சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த சினேகா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த மாலதி ஹெலன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியரான ரவிகுமாரை கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * மத்திய அரசு பணியில் இருந்த சந்திர சேகர் சாகமூரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * ஐ.ஏ.எஸ் அதிகாரியான சண்முக சுந்தரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * ஐ.ஏ.எஸ் அதிகாரியான நே.பொன்மணி ஈரோடு வணிக வரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • பிப்.1ஆம் தேதி நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தியாகியுமான நல்லகண்ணு நூற்றாண்டை தாண்டியுள்ள நிலையில், வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடி எழுந்துவருகிறது. இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

    அந்தவகையில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் இம்மாத தொடக்கத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    தீவிர சிகிச்சை பிரிவில் 20 நாட்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தற்போது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணுவுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    • காவல் துறையினரிடம் அனுமதி பெற ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் கூறினர்
    • விதிமுறைகளை மீறி 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது.

    விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், '22.02.2026 அன்று. தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, வேலூர் மாவட்டத்தின் தவெக நிர்வாகிகள் தங்கள் கட்சியின் தலைவர் நிகழ்ச்சிக்காக கடந்த ஒன்றரை மாதங்களாக அனுமதி கோரி போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி கடிதம் கிடைத்ததாகவும், கடிதத்தை பார்த்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    கடந்த 28.01.2026-ம் தேதி, தவெக கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு கூட்டம் 08.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் தங்கள் கட்சியின் தலைவர் மற்றும் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அனுமதி கோரி மனு அளித்தார். இதுகுறித்து காவல் துறை சார்பில் 30.01.2026 அன்று மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றி தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசாணை எண்.05-ன் படி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்பட்ட தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. இந்நிலையில் 05.02.2026 அன்று தவெக நிர்வாகம் சார்பாக 'சில தவிர்க்க முடியாத' காரணங்களால் நாள் தள்ளிப்போகும் நிலை ஏற்பாடுள்ளது. ஆதலால், நாங்கள் எங்கள் தலைமையிடம் மாற்று தேதி கேட்டு தங்களிடம் மீண்டும் மனு கொடுக்க உள்ளோம்" என மனு அளித்தார்.

    மீண்டும். 06.02.2026-ம் தேதி அன்று தவெக நிர்வாகம் சார்பாக மேற்படி நிகழ்ச்சியை 23.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் என மனு அளித்தார். இதுகுறித்து நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்ட நிலையில் 18.02.2026 அன்று அளித்த மனுவில் வேலூர் மாவடத்தில் 23.02.2025 அன்று எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு 06.02.2026 அன்று கடிதம் கொடுத்திருந்தோம். அந்த நிகழ்வில் பொதுமக்கள் 25,000 கலந்துகொள்ள அனுமதி கேட்டிருந்தோம்" மேலும் இந்த சந்திப்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 4900 பேர் கலந்துகொள்ள திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காலம் துறையினரால் 19.02.2026-ம் தேதியன்று நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. அதற்கான தகவல்கள் அடங்கிய பதிலுரையினை தமிழக வெற்றிக் கழகத்தினர் 20.02.2026-ம் தேதி சமர்பித்தனர்.

    தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 5 நாட்களுக்கு முன்பாக மனு அளித்திருந்த போதிலும் போது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்தும் 22.02.2026-ம் தேதி காவல் துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அவிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதமும் செய்யாமல் மனு அளிக்கப்பட்ட நான்கு நாட்களில் உரிய அனுமதி வழங்கப்பட்டது.

    தவெக கட்சி நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காவல் துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதங்களாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகதான் காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது என கூறியது ஒற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

    மேலும், தவெக கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது. ஆனால், 23.02.2026-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மனுவில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. இச்செயலானது மாண்பமை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.

    • பிப்.1ஆம் தேதி நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தியாகியுமான நல்லகண்ணு நூற்றாண்டை தாண்டியுள்ள நிலையில், வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடி எழுந்துவருகிறது. இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

    அந்தவகையில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் இம்மாத தொடக்கத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    தீவிர சிகிச்சை பிரிவில் 20 நாட்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தற்போது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று கேட்டறிந்தார்.

    இதுகுறித்து வர வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லக்கண்ணு அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து மருத்துவர்களிடம் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தேன்" என்று தெரிவித்துள்ளார். 

    ×