search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காது குத்து முதல் கல்யாணம் வரை... கட்சியினர் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தும் விஜய பிரபாகரன்
    X

    காது குத்து முதல் கல்யாணம் வரை... கட்சியினர் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தும் விஜய பிரபாகரன்

    • தே.மு.தி.க.வினரின் இல்ல நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் விஜயபிரபாகரன் நேரில் செல்ல தயக்கம் காட்டுவதே இல்லை.
    • தே.மு.தி.க. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் எழுச்சி என்பது கேள்வி குறியாகவே உள்ளது என அரசியல் நிபுணர்கள் கணித்து வருகிறார்கள்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சி தொடர்பான கூட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார். கட்சியில் பிரேமலதாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    அதே நேரத்தில் விஜயபிரபாகரனையும் அவர்கள் மறந்து விடவில்லை. இளைஞர் அணியை வழிநடத்தி செல்லும் பொறுப்பை விஜயபிரபாகரனிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப இளைஞர் அணியில் மாநில தலைமை பொறுப்பை அவரிடமே வழங்க வேண்டும் என்றும் தே.மு.தி.க.வினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். விரைவில் நடைபெற உள்ள தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது ஒரு புறம் இருக்க... விஜயபிரபாகரனோ... கட்சி பொறுப்புகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடமையே கண்ணாக பணியாற்றி வருகிறார். தே.மு.தி.க.வினரின் இல்ல நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் விஜயபிரபாகரன் நேரில் செல்ல தயக்கம் காட்டுவதே இல்லை. காது குத்து முதல் கல்யாணம் வரை வரிசை கட்டி நிற்கும் எல்லா நிகழ்ச்சிகளிலுமே விஜயபிரபாகரன் தவறாமல் ஆஜராகி விடுகிறார்.

    கட்சியினர் மனம் மகிழும் வகையில் நடந்து கொள்ளும் அவர் அந்த நிகழ்ச்சிகளில் பேசும்போது, இது நமது குடும்ப விழா. நீங்கள் எல்லாம் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்பதை தவறாமல் சுட்டிக்காட்டிட மறப்பது இல்லை. இது கட்சியினர் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் விஜயபிரபாகரனை இளைய கேப்டன் என்றும், எழுச்சி நாயகன் என்றும் தே.மு.தி.க.வினர் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

    எதிர்காலத்தில் தே.மு.தி.க.வை வழி நடத்தி செல்லும் அத்தனை தகுதிகளும் விஜயபிரபாகரனிடம் உள்ளன என்றும், எனவே நிச்சயம் அரசியலில் நாங்கள் குறிப்பிடுவது போல எழுச்சி நாயகனாகவே அவர் ஒருநாள் மாறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    தே.மு.தி.க. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் எழுச்சி என்பது கேள்வி குறியாகவே உள்ளது என அரசியல் நிபுணர்கள் கணித்து வருகிறார்கள். ஆனால் தே.மு.தி.க.வினரோ இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதில் இருந்தும் மீண்டு வருவோம். இதற்கான அடித்தளம்தான் விஜயபிரபாகரனின் இந்த "வீட்டு சுற்றுப்பயணம்" என்றும் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

    Next Story
    ×