search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்- உதயநிதி ஸ்டாலின்
    X

    மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்- உதயநிதி ஸ்டாலின்

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
    • இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்த கட்சி தி.மு.க. நாங்கள் சொல்லும் ஒரு வார்த்தை இந்தி தெரியாது போடா.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் பாரதிய ஜனதாவை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள 6 மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினர் மற்றும் மாணவர் அணியினர் குவிந்தனர்.

    மத்திய அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாணவர் அணி செயலாளர் டாக்டர் எழிலரசன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தி திணிப்பு நடவடிக்கையை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினார்.

    தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் எப்போதும் இந்தி திணிப்புக்கு எதிராக போராடுவோம். மீண்டும் ஒரு மொழிப்போர் சூழலை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டாம். தொடர்ந்து இந்தி திணிப்பை மேற்கொண்டால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம். முதல் கட்ட போராட்டம் இன்று நடந்துள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். 2019-ம் ஆண்டு நிலை தான் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்படும்.

    மோடி, அமித்ஷா நினைப்பது போல இங்கு நடப்பது அ.தி.மு.க. ஆட்சி அல்ல. இப்போது தமிழகத்தை ஆட்சி செய்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா? என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.

    இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்த கட்சி தி.மு.க. நாங்கள் சொல்லும் ஒரு வார்த்தை இந்தி தெரியாது போடா. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு துவக்கமாக இருக்கும்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கவில்லை என மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். எப்போதும் நுழைய விட மாட்டோம். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் உதயநிதி ஸ்டாலின் காரில் புறப்படும்போது அவரிடம் நிருபர்கள், "டெல்லியில் போராட்டம் எப்போது நடத்தப்படும்" என்று கேட்டனர். அதற்கு அவர், "தி.மு.க. தலைவர்தான் முடிவு செய்து அறிவிப்பார்" என்று பதிலளித்தார்.

    முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், இரா.கிரிராஜன், கனிமொழி சோமு, இளைஞர் அணி துணை செயலாளர்கள் தூத்துக்குடி ஜோயல், ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ., தாயகம் கவி, மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம் மூர்த்தி, கருணாநிதி, எபிநேசர், மோகன், பரந்தாமன், பிரபாகர்ராஜா, மயிலை வேலு, மாவட்ட செயலாளர்கள் இளைய அருணா, மாதவரம் சுதர்சனம், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, தா. இளைய அருணா, மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன், பகுதி செயலாளர்கள் சேப்பாக்கம் மதன் மோகன், காமராஜ் அன்புதுரை, வி.எஸ்.ராஜ் கண்ணன், ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், மாவட்டத் தலைவர் வெற்றி வீரன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் க.கோவிந்தசாமி, இளைஞர் அணி அமைப்பாளர்கள் பொன் இளவரசன், எஸ்.கிருஷ்ணன், தி.நகர் லயன். சக்திவேல், மயிலை வேலு, சேப்பாக்கம் பகுதி பொருளாளர் வி.பி. சிதம்பரம், சேப்பாக்கம் ரகமத்துல்லா உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×