search icon
என் மலர்tooltip icon

  தமிழ்நாடு

  ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மந்திரி ராஜினாமா செய்யவேண்டும்- கே.பாலகிருஷ்ணன் பேட்டி
  X

  ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மந்திரி ராஜினாமா செய்யவேண்டும்- கே.பாலகிருஷ்ணன் பேட்டி

  • மத்திய அரசு நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
  • பழனியில் நீதிமன்ற உத்தரவுப்படி 500க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல்லில் இன்று மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

  மேற்குவங்க மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதியதில் 9 பேர் பலியாகி பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற பல்வேறு ரெயில் விபத்துகள் நாட்டில் நடந்துள்ளன. இதற்கு மத்திய அரசின் தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியப்போக்கே காரணம். விபத்து நடந்த பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதாக கூறுகின்றனர். பல்வேறு நவீன வசதிகள் வந்துவிட்ட போதிலும் விபத்துகளை தவிர்க்க இந்தியாவில் அதுபோன்ற எந்த வசதியையும் மத்திய அரசு செய்யவில்லை.

  நீட் தேர்வு வேண்டாம் என்று முதன்முதலில் தமிழகம் குரல் கொடுத்த நிலையில் தற்போது குஜராத், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களும் அந்த மனநிலைக்கு வந்துவிட்டன. நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடி, முறைகேடு ஆகியவை மாணவர்களின் வாழ்க்கை யோடு, எதிர்காலத்தோடு விளையாடுவதாக உள்ளது. எனவே மத்திய அரசு நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

  நெல்லையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடிக்கு பாதுகாப்பு அளித்ததற்காக கட்சி அலுவலகம் போலீசார் முன்னிலையிலேயே தாக்கப்பட்டது. அங்கிருந்த கம்யூனிஸ்ட்டு தொண்டர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். எனவே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகு றித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் ஆணவ கொலைகள் தொடர்வது கவலையளிக்கிறது. எனவே இதற்கு எதிராக தமிழக சட்டப்பே ரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து சட்டம் இயற்ற வலியுறுத்த உள்ளோம்.

  மேட்டூர் அணையிலிருந்து இந்த முறை ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடகா அரசுடன் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அதேபோல் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்காச்சோள பயிர்கள் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதுடன் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி பின்னர் அதிலிருந்து ஜகா வாங்கிவிட்டார். போட்டியிட்டால் கண்டிப்பாக தோல்வி உறுதி என்பதால் புறக்கணித்துவிட்டு வேறு காரணங்களை கூறி வருகிறார்.

  பழனியில் நீதிமன்ற உத்தரவுப்படி 500க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசும், பழனி தேவஸ்தானமும் நீதிமன்ற உத்தரவுகளை காரணம் காட்டாமல் அந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×