search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை
    X

    அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை

    • கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • 15,000 கோவில்கள் பயன்பெற்று வருகின்றன.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் 2023-2024-ம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 26-வது மாதாந்திர சீராயவுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.

    இக்கூட்டத்திற்கு பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்ற கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் 2021 2022 ஆம் ஆண்டில் 10 கோவில்களில் பெருந்திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.1,230 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    2023-2024 ஆம் ஆண்டு அறிவிப்புகளின்படி, அழகர்கோயில், கள்ளழகர்கோவில், மருதமலை, சுப்பிரமணிய சுவாமி கோவில், சிறுவாபுரி, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், மேல்மலையனூர், அங்காளபரமேஸ்வரி கோவில், திருச்சி மாவட்டம், குமாரவயலூர், சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் ரூ. 200 கோடி மதிப்பீட்டிலும் ஒருங்கிணைந்த பெருந்திட்டப் பணிகள் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

    சிறப்பு திட்டங்களாக நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப்பட்டினத்தில் தமிழ்மூதாட்டி ஔவையாருக்கு ரூ.18 கோடி மதிப்பீட்டில் மணி மண்டபம், மயிலாப்பூரில் ரூ.28.76 கோடி மதிப்பீட்டில் ஆன்மிக கலாச்சாரம் மையம், மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலை ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கோவில்களில் உலோகத் திருமேனிகளை பாதுகாத்திடும் வகையில் பாதுகாப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 1,833 உலோகத் திருமேனி பாதுகாப்பறைகள் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டு 1,737 பாதுகாப்பறைகள் கட்டிட பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 139 பணிகள் நிறைவுற்றுள்ளன. 927 பணிகள் நடைபெற்று வருகின்றன.

    2022-2023-ம் ஆண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான கோவில்களும், 2023 - 24 ஆம் ஆண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 கோவில்களும் அரசு மானியம், கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கிராமப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 2,500 கிராமப்புற கோவில்களுக்கும் 2,500 ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியிலே இருக்கின்ற கோவில்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ. 100 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல ஒருகால பூஜை திட்டத்தில் கோவில்களுக்கு வழங்கப்பட்டு வந்த வைப்பு நிதி ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டு, இதுவரை 15,000 கோவில்கள் பயன்பெற்று வருகின்றன.

    இந்த ஆட்சி பொறுப்பேற்றபின் 925 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. வருகின்ற செப்டம்பர் 3 ஆம் தேதி 38 கோவில்களிலும், 4 ஆம் தேதி 13 கோவில்களிலும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. கோவில்களுக்குச் சொந்தமான ரூ.5,169 கோடி மதிப்பீட்டிலான 5721 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமர குருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா, கவிதா, தலைமைப் பொறி யாளர் இசையரசன், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×