search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை போரூர், வரதராஜபுரம் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னை போரூர், வரதராஜபுரம் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

    • போரூரில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று பார்வையிட்டார்.
    • போரூர் கால்வாயில் உபரிநீர் செல்லும் வடிகால் பகுதிகளையும் நடந்து சென்று மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகரில் மழை காலங்களில் தாம்பரம் வரதராஜபுரம், போரூர், மதுரவாயல், பெரும்பாக்கம் பகுதிகளில் மழை வெள்ளம் தோங்கி விடுவதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையின் போதும் இந்த பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டது. அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு மழைநீரை வடியவைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதுமட்டுமின்றி போரூர், வரதராஜபுரம் பகுதிகளில் அடுத்தமுறை மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தரமாக மழைநீர் வடிகால் வசதியும் வெள்ளத்தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறி இருந்தார். அதற்கேற்ப அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

    அதன் அடிப்படையில் போரூரில் ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாயில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அங்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணியளவில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    போரூரில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது அதிகாரிகள் அவருக்கு பணிகள் பற்றி விளக்கி கூறினார்கள்.

    இங்கு நடைபெற்று வரும் வேலைகள் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முடிந்து விடும் என்று கூறினார்கள்.

    போரூர் கால்வாயில் உபரிநீர் செல்லும் வடிகால் பகுதிகளையும் நடந்து சென்று மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்குவதால் அதற்கு முன்பே பணிகளை விரைந்து முடித்து விடவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் படப்பை மனோகரன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    இந்த ஆய்வுக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரதராஜபுரம் பகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

    வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட முடிச்சூர் வரராஜபுரம் பகுதியில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு சோமங்கலம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் வரதராஜபுரம் பகுதியில் குடியிருப்புகளை சூழாமல் அடையாறு ஆற்றை சென்றடையும் வகையில் சுமார் 70 கோடி மதிப்பில் 1972 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணியை அவர் நேரில் ஆய்வு மேற் கொண்டார்.

    Next Story
    ×