search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
    X

    அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

    • அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவை சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் வருகிற 29-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 7 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

    பட்டப்படிப்பு முடித்தவர்கள், மேற்படிப்பு செல்வதற்கும், வேலைவாய்ப்பு பெறவும் சான்றிதழ் அவசியம். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த கல்வியாண்டு படிப்பு முடித்தவர்களுக்கு இன்னும் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை.

    இதனால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தவிப்பில் இருந்தனர். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவை சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் வருகிற 29-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

    இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், "அண்ணா பல்லைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பல்வேறு துறைகளை சார்ந்த 69 மாணவர்களுக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த 69 மாணவ-மாணவிகளுக்கும் பிரதமர் நரேந்திரமோடி பதக்கம் அணிவிக்கிறார்.

    தங்கப்பதக்கம் பெறும் 69 பேரில் 31 மாணவ-மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களை சேர்ந்தவர்கள். 38 பேர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் படித்தவர்கள்.

    பட்டமளிப்பு விழாவில் நேரில் பங்கேற்க அனைத்து ஆராய்ச்சி மாணவர்களையும் ஜூன் 23-ந்தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம்" என்றார்.

    இதற்கு முன்பு கடந்த 2021 மார்ச் 11-ந்தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இப்போது 29-ந்தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.

    இதையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×