search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஐ.எஸ்.ஆதரவாளர்களுடன் தொடர்பு- சென்னை உள்பட 9 இடங்களில் அதிரடி சோதனை
    X

    மயிலாடுதுறை அருகே நீடுரில் உள்ள சாதிக்பாட்ஷா வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


    ஐ.எஸ்.ஆதரவாளர்களுடன் தொடர்பு- சென்னை உள்பட 9 இடங்களில் அதிரடி சோதனை

    • மயிலாடுதுறையில் பிடிபட்ட 5 பேரிடமும் அப்போது நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர்.
    • அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்றுள்ளது.

    ராயபுரம்:

    தமிழகத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து தேசிய புலனாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் மயிலாடுதுறையில் கடந்த பிப்ரவரி மாதம் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மயிலாடுதுறை நீடூரைச் சேர்ந்த சாதிக்பாஷா, இலந்தனகுடியைச் சேர்ந்த ஜஹபர் அலி, கூட்டாளிகளான கோவை முகமது ஆஷிக், காரைக்கால் முகமது இர்பான், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரஹ்மத் ஆகிய 5 பேரையும் கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே காரில் சென்றபோது என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேரையும் மடக்கி பிடித்தனர். அப்போது பிடிபட்டவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக இன்று 9 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 ஊர்களிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.

    சென்னையில் மண்ணடி உள்பட 3 இடங்களில் சோதனை நடந்தது. மயிலாடுதுறையில் 5 இடங்களிலும், காரைக்காலில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது.

    மயிலாடுதுறையில் பிடிபட்ட 5 பேரிடமும் அப்போது நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்றுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், எலந்தங்குடி, அரிவேலூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 25 பேர் கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் 5 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    நீடூரில் உள்ள சாதிக் பாட்ஷா வீட்டில் புகுந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் வீட்டின் கதவை பூட்டினர். பின்னர் அங்கு இருந்த சாதிக்பாட்ஷா உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதேபோல் உத்திரங்குடியில் ஜெகபர் சாதிக் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. சில ஆவணங்களை காட்டி விளக்கம் கேட்டனர். மேலும் மற்ற 3 இடங்களிலும் தீவிரமாக சோதனை நடந்து வருகிறது. இதில் சில முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.

    சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×