search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய புயல் உருவாகுமா? 13-ந்தேதி மேலடுக்கு சுழற்சிக்கு வாய்ப்பு
    X

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய புயல் உருவாகுமா? 13-ந்தேதி மேலடுக்கு சுழற்சிக்கு வாய்ப்பு

    • வருகிற 13-ந்தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகிறது.
    • புயலாக மாறுமா? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்.

    சென்னை:

    வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்தது.

    மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்த போது பலத்த காற்று வீசியது. மரங்களும் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளிலும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் மின்னல் வேகத்தில் சரி செய்தனர். இதனால் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

    இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் இன்று தகவலை வெளியிட்டுள்ளது. அதில் வருகிற 13-ந்தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகிறது. இது 13, 14-ந்தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது. பின்னர் அது புயலாக மாறுமா? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்.

    13-ந்தேதிக்கு பிறகே அது தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரியவரும் என்று தெரிவித்துள்ளது.

    மாண்டஸ் புயல் கரையை கடந்து ஓய்ந்துள்ள நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய புயல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மேலடுக்கு சுழற்றி வலுப்பெற்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13-ந்தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவான பின்னர் அது 17, 18, 19 ஆகிய தேதிகளில் புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த புதிய புயல் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

    புயல் கரையை கடக்கும் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் தொடர் மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதிய புயல் உருவாகும் பட்சத்தில் தமிழக கடலோர பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. புதிய புயலின் தாக்கம் எப்படி இருக்கும்? அது எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது போன்ற விரிவான தகவல்களை வானிலை மையம் அடுத்தடுத்த அறிவிப்புகளில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×