search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளும் விரைவில் இணையங்கள் மூலம் இணைக்கப்படும்- அமைச்சர் பெரியகருப்பன்
    X
    அமைச்சர்கள் பெரியகருப்பன், மனோதங்கராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளும் விரைவில் இணையங்கள் மூலம் இணைக்கப்படும்- அமைச்சர் பெரியகருப்பன்

    • நகரங்களுக்கு இணையாக கிராமப்புற மக்களின் வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும்.
    • 12 ஆயிரத்து 525ஊராட்சிகளும் இணைய வழி மூலம் இணைக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் கன்னியாகுமரியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காக தேவையான கட்டமைப்பு வசதிகளை முதல்-அமைச்சர் உருவாக்கி வருகிறார். இதற்காக எல்லா துறைகளுக்கும் ஆலோசனை வழங்கி உள்ளார். ஊரக வளர்ச்சி துறைக்கும் பல்வேறு பங்களிப்பை வழங்கி வருகிறார்.

    இந்த துறையை பொறுத்த வரை கிராமப்புற மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நகரங்களுக்கு இணையாக கிராமப்புற மக்களின் வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்பது முக்கியம். இதற்காக தொடங்கப்பட்டது தான் மகளிர் சுய உதவிக் குழு.

    இதன் மூலம் வேலை வாய்ப்பு மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சியும் மேம்பட்டுள்ளது. கிராமப்புறங்களை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி 1 லட்சத்து 19 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்துள்ளோம்.

    ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்கான பயிற்சி மையம் கன்னியாகுமரியில் விரைவில் அமையும். இதற்கான இடத்தை இன்று ஆய்வு செய்துள்ளோம். இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று எழிலாய்ந்த பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்படும்.

    12 ஆயிரத்து 525 ஊராட்சிகளும் இணைய வழி மூலம் இணைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வெகுவிரைவில் அனைத்து ஊராட்சிகளும் இணையங்களில் இணைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×