search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எனக்கு அந்த பதவிக்கு ஆசை இல்லை- பதவியேற்ற பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    எனக்கு அந்த பதவிக்கு ஆசை இல்லை- பதவியேற்ற பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார்.
    • தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதி்க்கு கடந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில் திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டார்.

    இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.

    இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டசபை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்றுக் கொண்டார்.

    அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டனர்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.

    பதவி ஏற்ற பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 20 மாத ஆட்சிக்கு மக்கள் அளித்து உள்ள அங்கீகாரம் ஆகும். கூட்டணி கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக பணியாற்றி எனக்கு வெற்றியை தேடித் தந்து இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பின்படி நடந்து கொள்வேன். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற உழைப்பேன்.

    தற்போது சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை உள்ளார். அவர் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக தொடர்ந்து செயல்படுவார். எனக்கு அந்த பதவிக்கு ஆசை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×