search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோட்டில் மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி- குவிண்டால் ரூ.2 ஆயிரம் வரை உயர்வு
    X

    ஈரோட்டில் மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி- குவிண்டால் ரூ.2 ஆயிரம் வரை உயர்வு

    • தற்போது சில வாரங்களாக ஈரோடு பகுதியில் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கினாலும் வரத்து சீராக உள்ளது.
    • கர்நாடகா, தர்மபுரி பகுதிகளில் அறுவடை செய்த தரமான மஞ்சளுக்கு ஈரோடு பகுதியில் விலை கிடைப்பதால் அவற்றை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூடங்கள் ஆகிய 4 இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இங்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மூட்டைகள் வரை மஞ்சள் விற்பனையாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன் பின்னர் மஞ்சள் தேவை அதிகரித்ததன் காரணமாகவும் தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளிலும் புதிய மஞ்சள் அறுவடை நடந்ததாலும் மஞ்சள் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த மார்ச் 13-ம் தேதி கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.15 ஆயிரத்து 557 முதல் 21 ஆயிரத்து 369 வரை என விலை உயர்ந்தது. அதற்கு இணையாக பிற இடங்களிலும் தரமான மஞ்சள் ரூ.20 ஆயிரத்திற்கு மேலாக விற்பனையானது. அதன் பின் மீண்டும் விலை குறைய தொடங்கியது.

    பின்னர் மார்ச் 27-ம் தேதியில் குவிண்டால் ரூ.17 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் மஞ்சள் மார்க்கெட்டுக்கு 10 நாட்களுக்கு மேலாக விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏலம் தொடங்கியதும் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரமாக நீடித்தது. தேர்தலுக்குப் பின் கடந்த 12 நாட்களில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து ரூ.18 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் சீசன் தொடங்கி புதிய மஞ்சள் வரத்தால் குவிண்டால் ரூ.21 ஆயிரத்தை கடந்தது. அதே நேரம் பஸ்மத், நாம்டேட் உட்பட பல மாநிலங்களில் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கியதால் மஞ்சள் வரத்து அதிகரித்தது.

    இதனால் விலை குறைய தொடங்கியது. தற்போது சில வாரங்களாக ஈரோடு பகுதியில் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கினாலும் வரத்து சீராக உள்ளது. கர்நாடகா, தர்மபுரி பகுதிகளில் அறுவடை செய்த தரமான மஞ்சளுக்கு ஈரோடு பகுதியில் விலை கிடைப்பதால் அவற்றை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருகின்றனர்.

    அதன் காரணமாக கடந்த 12 நாட்களில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்து நேற்று அதிகபட்சமாக குவிண்டால் ரூ.18 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 29 முதல் ரூ.18 ஆயிரத்து 599 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.9 ஆயிரத்து 600 முதல் ரூ.16 ஆயிரத்து 719 வரையிலும் விற்பனையானது.

    அதேபோல ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 900 முதல் ரூ.18 ஆயிரத்து 810-க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 9 முதல் ரூ.17 ஆயிரத்து 99-க்கும் விற்பனையானது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கும் மொத்தம் 445 மூட்டைகளில் மஞ்சள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 623 மூட்டை மஞ்சள் ஏலம் போனது. தொடர்ந்து மஞ்சள் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×