search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்சார கட்டணம் உயர்வை எதிர்த்து நூற்பாலை சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
    X

    மின்சார கட்டணம் உயர்வை எதிர்த்து நூற்பாலை சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

    • மின் கட்டண உயர்வு விவகாரத்தில் யாரேனும் மேல்முறையீடு மனு செய்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
    • தமிழக நூற் பாலைகள் சங்கங்கள் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து நேற்று முன்தினம் அது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும்' என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை தனி நீதிபதி அமர்வு, ''தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை நியமிக்கும் வரை கட்டண உயர்வு செய்யக்கூடாது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம்'' என உத்தரவிட்டிருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில் மீண்டும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, மின் கட்டண உயர்வு தொடர்பான தமிழக அரசாணை செல்லும் என பல்வேறு கோரிக்கைகள் கொண்ட உத்தரவை பிறப்பித்தது.

    இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான குமணன் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், 'தமிழக மின் கட்டண உயர்வு விவகாரத்தில் ஐகோர்ட்டு மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம்' என தெரிவித்துள்ளார். இதே போல் தமிழக நூற் பாலைகள் சங்கங்கள் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×