search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த கானத்தூர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி- நேச்சுரலே நிறுவனம் சார்பில் நடந்தது
    X

    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த கானத்தூர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி- 'நேச்சுரலே' நிறுவனம் சார்பில் நடந்தது

    • நல்லதை செய்வதற்காக மக்கள் திரளாக வருவார்கள்.
    • மக்களும் குப்பைகளை அப்படியே வீசக்கூடாது.

    சென்னை:

    சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'நேச்சுரலே' நிறுவனம் சார்பில் சென்னை அடுத்த கானத்தூர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    'நேச்சுரலே' நிறுவனம், 'சத்சவ் அறக்கட்டளை' மற்றும் 'எக்னோரா' அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கடல் அழகை பராமரிப்பது குறித்த அர்ப்பணிப்பை எடுத்துக் கூறும் வகையிலும் சென்னையை அடுத்த கானத்தூர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.

    இந்த நிகழ்ச்சியில் 'நேச்சுரலே' நிறுவனத்தின் நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், சத்சவ் அறக்கட்டளை உறுப்பினர் கணேஷ், எக்னோரா அமைப்பின் உறுப்பினர் மோகன் உள்பட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் கடற்கரையில் மலைபோல் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத கழிவுகளை தனித்தனியாக பிரித்து சேகரித்தனர். பின்னர் அவை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஊழியர்கள் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டது.

    சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு 'நேச்சுரலே' நிறுவனத்தின் இந்த முயற்சி வருங்காலத்திலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக 'நேச்சுரலே' நிறுவனத்தின் நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன் கூறியதாவது:-

    மனிதர்களால் சேதப்படுத்தப்பட்ட இயற்கையை, மனிதர்களாலேயே மறுசீரமைப்பு செய்தல் மற்றும் நிலைத்தன்மை ஆகிய கொள்கைகளை அடிப்படையாக வைத்துதான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. நல்லதை செய்வதற்காக மக்கள் திரளாக வருவார்கள். இதனால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

    கடற்கரையை சுத்தம் செய்ததில், ஏராளமான பிளாஸ்டிக்குகள், பாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள், காலணிகள் கிடந்ததை அகற்றினோம். இவற்றை அப்படியே போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். எனவே குப்பைகளை போடுவதற்காக சிமெண்ட் தொட்டிகளை வைக்க இருக்கிறோம்.

    மக்களும் குப்பைகளை அப்படியே வீசக்கூடாது, குப்பை தொட்டிகளில்தான் போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். ஒருவர் இதனை செய்தால், அவரை பின்பற்றி மற்றவர்களும் செய்வார்கள். நாம் அதில் மாற்றத்தை காண முடியும். இதுதான் எங்களுடைய யோசனை. இதனை அனைவரும் இணைந்து செய்ய வேண்டும். இது முதல் திட்டம் என்பதால் சிறிய அளவில் செய்திருக்கிறோம்.

    சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரையை தொடர்ந்து சுத்தம் செய்தல் உள்ளிட்ட பிற நிகழ்வுகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம். சென்னையில் உள்ள கடற்கரைகளில் சிமெண்ட் குப்பை தொட்டிகள் வைப்பது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியிடமும் பேசி வருகிறோம். யோசனை அளவில் இருக்கும் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×