search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    48 கோவில்களை ஒருங்கிணைத்து சி.சி.டி.வி. கேமராவில் கண்காணிப்பு- சேகர்பாபு
    X

    48 கோவில்களை ஒருங்கிணைத்து சி.சி.டி.வி. கேமராவில் கண்காணிப்பு- சேகர்பாபு

    • 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர்தர கல்வியையும் நிறைவேற்றும் ஆட்சியாக உள்ளது.
    • சூரசம்ஹார நிகழ்ச்சியில் சுமார் 8 லட்சம் பேர் ஒரே நாளில் கூடினார்கள்.

    சென்னை:

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2½ ஆண்டுகள் முடிந்த தருவாயில் இந்து சமய அறநிலையத்துறை செய்துள்ள அரும்பணிகளை களங்கம் கற்பிக்கின்ற வகையில், முகநூல், வாட்ஸ் அப்களில் சிலர் அவதூறுகளை பரப்புகின்றனர்.

    இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட 1959-ம் ஆண்டில் இருந்து இதுவரையில் சாதிக்காத, கண்டிராத சாதனைகளை இந்த 30 மாதங்களில் அளவிட முடியாத அளவிற்கு ஒவ்வொரு நிகழ்வுகளையும், முந்தைய நிகழ்வுகள் முறியடித்து அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம்.

    ஆனால் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்கிறபோது அதுவே உண்மையாகிவிடக்கூடாது என்பதற்காக சிலர் பரப்பும் அவதூறுகளுக்கு இந்த துறை ஆற்றி உள்ள ஒருசில சாதனைகளை சொல்ல விரும்புகிறேன்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், குறைகள் பதிவிடுக, என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற கோவில்களின் குறைகளை பதிவிட்டவுடன் சம்பந்தப்பட்ட இணை ஆணையருக்கு அனுப்பி குறைகளை நிறைவு செய்யும் பணிகளை மேற்கொண்டோம்.

    அதன் தொடர்ச்சியாக துறைக்கு சம்பந்தப்பட்ட கோவில்களின் 4 கோடி பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஸ்கேன் (பதிவேற்றம்) செய்கின்ற பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம்.

    அந்த பணிகள் முழுவதுமாக நிறைவுற்று அந்தந்த கோவில் இ.ஓ.க்கள் ஆவணங்களை பதிவிறக்கம் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

    48 முதுநிலை கோவில்களை ஒருங்கிணைத்து அந்த கோவில்களுக்கு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு அதை இந்து சமய அறநிலைய துறையின் தலைமை அலுவலகத்தில் இருந்து கோவில்களில் நடைபெறுகிற அனைத்து வழிபாடுகளையும் கண்காணித்து அதில் குறைகள் இருக்குமானால், உடனே அதிகாரிகளுக்கு தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து வருகிறோம்.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 12 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை உயர்மட்ட செயல் திட்ட குழு தமிழக முதலமைச்சரை தலைவராக கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டது.

    மாவட்டங்களில் இருக்கிற சிறிய கோவில்களுக்கு அறங்காவலரை நியமிக்கும் பணிகளை துரிதப்படுத்த 38 வருவாய் மாவட்டங்களுக்கு அறங்காவலர்களை முழுமையாக நியமித்த ஆட்சி இந்த ஆட்சியாகும்.

    கோவில்கள் சார்பில் 10 கலைக் கல்லூரிகள், ஒரு ஐ.டி.ஐ. 27 பள்ளிக் கூடங்களை சிறப்பாக நிர்வகிக்க உயர்மட்ட கல்விக் குழுவையும் உருவாக்கி உள்ளோம்.

    அந்த வகையில் இங்கு படிக்கும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர்தர கல்வியையும் நிறைவேற்றும் ஆட்சியாக உள்ளது.

    திருவிழா காலங்களில் உதாரணத்துக்கு பழனி என்றால் தைப்பூசம், சூரசம்ஹாரம், கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர், அழகர் ஆற்றில் இறங்குவது மதுரை, மகாதீபம் என்று சொல்லப்படுகிற திருவண்ணாமலை தீபம் என்றாலும், வைகுண்ட ஏகாதசி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் என்றாலும் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் அந்த விழக்களை முன் கூட்டியே அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து திருவிழாவுக்கு தேவைப்படுகிற குடிநீர், கழிவுநீர் வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்பு ஏற்பாடு அனைத்தையும், ஒருங்கிணைத்து சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

    அண்மையில் நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் சுமார் 8 லட்சம் பேர் ஒரே நாளில் கூடினார்கள். நிகழ்ச்சி நடைபெற்ற மொத்த திருக்கல்யாணத்தையும் சேர்த்து 8 நாட்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்த திருவிழாவில் பங்கேற்றார்கள்.

    அதே போல் அந்த கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் காரணமாக இடையூறுகளை கடந்து 26 இடங்களில் தற்காலிக ஷெட் அமைத்து 35 ஆயிரம் பேர் தினமும் சஷ்டியில் விரதம் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இத்தனை லட்சம் பேர் கூடிய அந்த இடத்தில் ஒரு சிறு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை. சங்கிலி பறிப்பு திருட்டு நடந்ததாக கூட புகார் இல்லை. எந்த விதமான புகாரும் இல்லாத நிலையில் திருவிழாக்களை நேர்த்தியாக நடத்திய ஆட்சி இதுவாகும்.

    ரூ. 1,462 கோடி செலவில் வரைவு திட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. திருச்செந்தூரில் மட்டும் தனியார் பங்களிப்போடு ரூ.300 கோடி அளவுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது.

    அந்த வகையில் 15 கோவில்களில் இந்த வரைவு திட்டத்தை பயன்படுத்தி இறையன்பர்கள் பிரமிக்கும் வகையில் தமிழகத்தின் கோவில்கள் உருவாக்கப்படும்.

    1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களை கண்டறிந்து அவைகளை ஆவணப்படுத்தி இருக்கிறோம். அதில் 518 கோவில்கள் வருகின்றன. இந்த கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள 2022-2023-ம் ஆண்டு சுமார் 100 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மானியமாக வழங்கினார். 2023-24 இந்த ஆண்டும் ரூ.100 கோடியை வழங்கி உள்ளார்.

    இதனுடன் பக்தர்கள் நன்கொடையாக சுமார் ரூ.140 கோடியை வழங்கி இருக்கிறார்கள். ரூ.340 கோடி செலவில் திருப்பணிகளை ஆயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட கோவில்களில் செயலாற்றி வருகிறது. இப்படி பல்வேறு திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 3 கோவில்களில் தங்க ரதம், 5 கோவில்களில் வெள்ளி ரதங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் திருத்தணி முருகன் கோவில் வெள்ளி ரதம் பக்தர்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலில் சிதலமடைந்த வெள்ளி தேர் 32 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.3 கோடி செலவில் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் 71 மரத்தேர் உருவாக்கும் பணியும் நடக்கிறது.

    இப்படி பல்வேறு பணிகளை செவ்வனே செய்து வந்த போதிலும் அறநிலையத்துறை பற்றி திட்டமிட்டு சிலர் அவதூறுகளை பரப்புவது வேதனையாக உள்ளது.

    இந்த ஆட்சிதான் இறையன்பர்களை பாதுகாக்கிற ஆட்சியாக மட்டும் இல்லாமல் தெய்வத் திருமேனிகளை மீட்டெடுக்கும் ஆட்சியாகவும் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×