search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் மாவட்டத்தில் 12 திருமணங்கள் நடத்தி மோசடி செய்த கும்பல்- வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
    X

    நாமக்கல் மாவட்டத்தில் 12 திருமணங்கள் நடத்தி மோசடி செய்த கும்பல்- வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

    • திருமணம் முடிந்ததும் இரண்டு நாளைக்கு மட்டுமே மாப்பிள்ளை வீட்டில் பெண் இருப்பார்.
    • கார் டிரைவர் ஜெயவேலை அனுப்பி மணப்பெண்ணை கொண்டு வந்து விடுவோம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 33). இவருக்கும், மதுரையை சேர்ந்த போலி திருமண கும்பலை சேர்ந்த சந்தியா (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 7-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 2-வது நாளில் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக்கொண்டு சந்தியா மாயமானார்.

    திருமண ஆசையில் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து தனபால் பரமத்திவேலூர் போலீசில் கொடுத்தார். அதன் பேரில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போலி மணப்பெண் சந்தியா, பெண் புரோக்கர் தனலட்சுமி ஆகிய இருவரும் சேலம் பெண்கள் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் கார் டிரைவர் ஜெயவேல், பெண் புரோக்கர் தனலட்சுமியின் உறவினர் ஏ.சி. மெக்கானிக் கவுதம் ஆகிய இருவரும் பரமத்தியில் உள்ள கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மோசடி திருமணங்கள் நடத்திய அய்யப்பன் போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். தற்போது அவர் பேசிய வீடியோ வைரலாக வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் இதேபோல் வேறு பெண்களை வைத்து சுமார் 12 மோசடி திருமணங்கள் நடந்திருக்கிறது. மதுரையை சேர்ந்த பாலமுருகன் நெட்ஒர்க் தலைவனாக இருந்து கொண்டு அவன் சொல்கின்ற வேலைகளை நாங்கள் செய்வோம்.

    திருமணம் முடிந்ததும் இரண்டு நாளைக்கு மட்டுமே மாப்பிள்ளை வீட்டில் பெண் இருப்பார். பிறகு கார் டிரைவர் ஜெயவேலை அனுப்பி மணப்பெண்ணை கொண்டு வந்து விடுவோம். புரோக்கர் பாலமுருகனுக்கும் இந்த திருமண மோசடிகளுக்கு கார் டிரைவர் ஆக ஜெயவேல் இருந்துள்ளார்.

    ஓடிவரும் பெண்ணிடம் இருக்கும் பொருளை விற்று கார் டிரைவருக்கு கொடுப்போம். இந்த திருமண மோசடி தொழிலை கடந்த நான்கு வருடங்களாக தமிழக முழுவதும் செய்து வந்துள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 மோசடி திருமணங்களை நடத்தி வைக்கப்பட்டுள்ளது. தப்பு பண்ணிட்டேன் இதுக்கு மேல இவங்க கூட நான் சேர மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த வீடியோ பரமத்திவேலூர் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

    அய்யப்பன் தப்பிய விவகாரம், வைரலாகும் வீடியோ ஆகியவை குறித்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் கூறும்போது, அய்யப்பன் பேசுவதாக கூறும் வீடியோ போலீசார் வாக்குமூலமாக எடுத்தது அல்ல. அவர் மீது புகார் கொடுத்தவர்கள் எடுத்ததாக தெரிகிறது. தப்பிய அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தான் அய்யப்பன் தப்பி ஓடினார்.

    இதனிடையே அய்யப்பன் என்ற பெயரில் யாரும் சிகிச்சைக்கு இங்கு வரவில்லை என அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×