search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி ரூ.1000 நிதி வழங்கப்படும்- வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி ரூ.1000 நிதி வழங்கப்படும்- வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு

    • அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படித்து முடித்த பிறகு அவர்கள் உயர்கல்வி படிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் போது மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
    • பணம் ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி ஒவ்வொரு மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    சென்னை:

    அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி வங்கி கணக்கு மூலம் நேரடியாக செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோளிகர் வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு:-

    தமிழ்நாட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறையின் இயக்குனர் கடிதத்தை அரசு கவனமுடன் பரிசீலித்து அவரின் கருத்துருவை ஏற்று கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்து ஆணையிடுகிறது.

    அதில் ஏற்கனவே இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைக்கப்படுகிறது.

    அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படித்து முடித்த பிறகு அவர்கள் உயர்கல்வி படிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் போது மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

    இந்த பணம் ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி ஒவ்வொரு மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த மாணவிகள் மற்ற கல்வி உதவித் தொகைகளுடன் சேர்த்து இதற்கு தகுதி உடையவர்களாக இருப்பார்கள்.

    இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெற முடியும்.

    இந்த புதிய திட்டத்திற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இந்த திட்டம் முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள மாணவியர் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து தேர்ச்சி பெற்றது குறித்து பள்ளிக்கல்வித்துறை சரி பார்க்க வேண்டும்.

    ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவியர் வங்கிகளில் கணக்கு தொடங்க உயர் கல்வித்துறை வழிகாட்ட வேண்டும்.

    அவர்கள் ஜூன் 30-ந்தேதியில் இருந்து டிசம்பர் 31-ந்தேதி வரையிலான ஒவ்வொரு 6 மாத காலம் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி படிப்பதற்கான சான்றளிக்கவும் அவர்களுக்கு உதவ வேண்டும்.

    சமூக நல இயக்குனர் ஒவ்வொரு மாணவிக்கும் ரூ.1000 ஊக்கத் தொகையை அனுமதிக்கவும் வழங்கவும் அதிகாரம் பெற்றுள்ளார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×