search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆசிரியர்கள் கைதுக்கு தலைவர்கள் கண்டனம்
    X

    ஆசிரியர்கள் கைதுக்கு தலைவர்கள் கண்டனம்

    • ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்.
    • ஆசிரியர்களின் போராட்டத்தை சரியான முறையில் கையாள தமிழக அரசு தவறி விட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள், 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட 311-வது மற்றும் 181-ம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

    அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181-வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைது செய்ததையும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும், வன்மையாக கண்டிக்கிறேன்.

    100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர்கள் இப்போது முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகள் தான். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க. அரசு இன்னும் கூடுதல் காலக்கெடு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் இந்த நிலைப்பாட்டை மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    ஆசிரியர்களின் போராட்டத்தை சரியான முறையில் கையாள தமிழக அரசு தவறி விட்டது. போராட்டம் தொடங்கி 6 நாட்கள் வரை அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கே அரசு முன்வரவில்லை. தாமதமாக அரசு நடத்திய பேச்சுகளிலும் கூட ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படவில்லை. ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றால், அவர்களை அழைத்துப் பேசி, அரசின் நிலைமையை விளக்கி, ஒரு சில கோரிக்கைகளையாவது நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அரசு அதன் தீர்வுகளை ஆசிரியர்கள் மீது திணித்தது தான் போராட்டம் தொடர்வதற்கு காரணம் ஆகும்.

    இந்த உண்மைகளையெல்லாம் உணராமல், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை இன்று காலை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தங்களின் வாழ்வுரிமைக்காக போராடும் ஆசிரியர்களை அடக்குமுறை மூலம் நசுக்க முயலக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அமைதியான முறையில் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

    ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட குழுவே செயல்படாத நிலையில், மீண்டும் அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற முடியாது எனக்கூறி தங்களது போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்கள் காவல்துறையினரால் இன்று அதிகாலை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×