search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேச்சிப்பாறை அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
    X

    திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்கு தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நகர் பகுதிகளில் மழை இல்லாத நிலையில் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்கு தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் 3-வது நாளாக இன்றும் தடை விதித்து அறிவிப்பு பேனர் வைத்து உள்ளதோடு, அருவி அருகில் செல்லாமல் இருக்க கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1841 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து பாசனத்திற்கு 272 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 4016 கனஅடி உபரிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.40 அடியாக உள்ளது. அணைக்கு 691 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 475 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.66 அடியாக உள்ளது. அணைக்கு 113 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.76 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 38.06 அடியாகவும் உள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- (மில்லி மீட்டரில்)

    பேச்சிப்பாறை-10.8, பெருஞ்சாணி-3.4, சிற்றார்-1-3.4, சிற்றார்-2 -2.2, மாம்பழத்துறையாறு-2, புத்தன்அணை-2.8, சுருளோடு-1.4, கன்னிமாா்-6.2, பூதப்பாண்டி-1.6, பாலமோா்-7.2, அடையாமடை-3, ஆணைக்கிடங்கு-1.2, கோழிப்போர்விளை-2.8.


    Next Story
    ×