search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 123 கலை நிகழ்ச்சிகள்- அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தொடங்கி வைக்கிறார்
    X

    அமைச்சர் தங்கம் தென்னரசு

    சென்னையில் 123 கலை நிகழ்ச்சிகள்- அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தொடங்கி வைக்கிறார்

    • சென்னையில் 123 கலை நிகழ்ச்சிகளும், இதர மாவட்டங்களில் 37 கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
    • சென்னை மாவட்டத்தை சேர்ந்த 15 கலைஞர்கள் இவ்விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் நாட்டின் அரிய கலை வடிவங்களை மக்களிடையே கொண்டு செல்லவும், அவற்றை வளர்க்கவும், கலை வாய்ப்புகளை வழங்கி கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவும், பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 160 கலை நிகழ்ச்சிகளை "மக்கள் கலை விழா"வாக நடத்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் 123 கலை நிகழ்ச்சிகளும், இதர மாவட்டங்களில் 37 கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. சென்னையில் நடைபெறும் தொடக்க விழாவினைத் தொடர்ந்து இவ்விழா ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருங்காட்சியகத்தில் நடத்தப்பட உள்ளன.

    இந்நிகழ்ச்சிகளில் தமிழகத்தின் பல்வேறு கலை வடிவங்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த கலைஞர்களால் நடத்தப்பட உள்ளன. மேலும் சென்னை அரசு இசைக்கல்லூரி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்டக் கலை மன்றங்கள் வாயிலாக கலைத்துறையில் சாதனை படைத்த 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி, 19 வயது முதல் 35 வயது வரை கலை வளர்மணி, 36 வயது முதல் 50 வயது வரை கலைச் சுடர்மணி, 51 வயது முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது என வயதுக்கு ஏற்றவாறு விருதுகள் வழங்கப்படுகின்றன.

    சென்னை மாவட்டத்தை சேர்ந்த 15 கலைஞர்கள் இவ்விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இக்கலைஞர்களுக்கு இவ்விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கான மாநில அளவிலான கலைப்போட்டியில் வெற்றி பெற்ற 15 இளம் கலைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முப்பெரும் விழாவில் கலைஞர்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கி மக்கள் கலை விழாவினைத் தொடங்கி வைத்து விழா பேரூரையாற்றுகிறார்.

    இவ்விழாவில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் சே.ரா.காந்தி, அருங்காட்சியகங்கள் துறையின் இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி, ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×