search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆர்டர்லிகளை பயன்படுத்தும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்- ஐகோர்ட்டு கருத்து
    X

    ஆர்டர்லிகளை பயன்படுத்தும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்- ஐகோர்ட்டு கருத்து

    • முறையாக ஓராண்டுக்கு மேல் பயிற்சி பெற்ற மாதம் ரூ.45 ஆயிரம் ஊதியம் பெறும் போலீஸ்காரர்களை உயர் போலீஸ் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்ய வைப்பது குற்றமாகும்.
    • ஊரில் உள்ள எல்லா வாகனங்களிலும் ஒட்டப்பட்ட கருப்பு ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர்.

    சென்னை:

    போலீஸ் குடியிருப்பில் உள்ள மாணிக்கவேல் என்ற காவல்துறையை சேர்ந்த நபரை வெளியேற்ற கடந்த 2014-ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை போலீஸ் அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மாணிக்கவேல் வீட்டை காலி செய்துள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவரம் அவருக்கு தெரிய வந்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, போலீஸ் துறை மீது ஏராளமாக புகார்கள் சுமத்தப்படுகிறது. குறிப்பாக ஜீரணிக்க முடியாத குற்றச்சாட்டுகள் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக சுமத்தப்படுகிறது. அப்படிப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது அரசும் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று கருத்து தெரிவித்தார்,

    இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஐகோர்ட்டு தெரிவித்த கருத்து குறித்தும், ஆர்டர்லி முறை குறித்தும் உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி டி.ஜி.பி.க்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சரும் இதுதொடர்பாக ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளார்.

    மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனுமதி இல்லாமல் போலீஸ் குடியிருப்பில் யார் யார் குடியிருக்கிறார்கள் என்பதை கண்டறிய டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    முறையாக ஓராண்டுக்கு மேல் பயிற்சி பெற்ற மாதம் ரூ.45 ஆயிரம் ஊதியம் பெறும் போலீஸ்காரர்களை உயர் போலீஸ் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்ய வைப்பது குற்றமாகும். அரசிடம் உரிய தொகையை பெற்றுக்கொண்டு வீட்டு உதவியாளர்களை வேண்டுமானால் அதிகாரிகள் நியமித்துக்கொள்ளலாம். ஆர்டர்லிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற்று அவர்களை காவல் பணிக்கு அமர்த்த வேண்டும். அரசியல்வாதிகளும், காவல்துறையும் கூட்டு சேர்ந்து செயல்படக்கூடாது, அவ்வாறு செயல்பட்டால் மாநிலத்தை அழிவுக்கு கொண்டு செல்லும்.

    காரில் உள்ளே இருப்பவர்கள் வெளியில் தெரியாத வண்ணம் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டுவதால், குற்றங்கள் நடக்கும். அந்த ஸ்டிக்கரை அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன்படி ஊரில் உள்ள எல்லா வாகனங்களிலும் ஒட்டப்பட்ட கருப்பு ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர்.

    ஆனால், போலீஸ் உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டியிருக்க அனுமதிப்பதை என்னவென்று சொல்வது? போலீஸ் அதிகாரிகள் வீட்டில் உள்ள ஆர்டர்லிகளையும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல ஓய்வு பெற்ற நீதிபதிகளின் வீடுகளில் உள்ள போலீஸ்காரர்களையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 25-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    Next Story
    ×