search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் 3,240 டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதில் விதிமீறல்- பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகம் முழுவதும் 3,240 டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதில் விதிமீறல்- பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

    • ஒவ்வொரு பார் உரிமையாளர்களும் 2 மாத வாடகையை செக்யூரிட்டி டெபாசிட்டாக செலுத்தி உள்ளனர்.
    • ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் எல்.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 3,240 டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும். இந்த ஏலத்தில் பங்கேற்க 2-ந் தேதி முதல் 18-ந் தேதி (இன்று) வரை விண்ணப்பம் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பம் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அதாவது, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பார்களை ஒதுக்கீடு செய்வதற்காக மற்றவர்களுக்கு விண்ணப்பம் மறுக்கப்படுவதாகவும், இதன் பின்னணியில் ஆளும்கட்சியினர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

    ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு விண்ணப்பம் வழங்க மறுப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும் என்றும், விண்ணப்பம் வழங்க மறுப்பதாக முறையிடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கும்பட்சத்தில் அதனை ஏற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கட்டிட உரிமையாளர்களிடம் ஆட்சேபனையின்மை சான்றிதழ் (என்.ஓ.சி.) பெற்றால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.

    இந்த சான்றிதழை பெறுவதற்கு கட்டிட உரிமையாளர்களை ஆளும்கட்சியினர் மிரட்டுவதாகவும் தமிழ்நாடு பார் உரிமையாளர்கள், பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

    விண்ணப்பத்தில் கட்டிட உரிமையாளரிடம் என்.ஓ.சி. சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை குறிப்பிடும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் விண்ணப்பம் பெறவோ, ஏலத்தில் பங்கேற்கவோ கட்டிட உரிமையாளரின் என்.ஓ.சி. தேவையில்லை என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவிப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

    அலுவலக நேரங்களுக்கு பிறகும் ஆளும்கட்சியினருக்கு ஏலத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாகவும், புதிய விண்ணப்பதாரரை பயமுறுத்துவதற்காக முந்தைய பார் ஒப்பந்ததாரர் செலுத்தாத நிலுவைத் தொகையை செலுத்துவதாக உறுதியளிக்க வேண்டும் என நிர்ப்பந்திப்பதாகவும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு பார் உரிமையாளர்கள், பார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் அன்பரசன் கூறியதாவது:-

    'ஒவ்வொரு பார் உரிமையாளர்களும் 2 மாத வாடகையை செக்யூரிட்டி டெபாசிட்டாக செலுத்தி உள்ளனர். இதில் இருந்து நிலுவைத்தொகையை பிடித்தம் செய்ய வேண்டும்.

    மாறாக முந்தைய ஒப்பந்ததாரரின் நிலுவைத் தொகையை புதிதாக வருபவர் மீது சுமத்துவது நியாயமற்றது. டாஸ்மாக் பார் ஏலம் வெளிப்படையாக நடப்பதாக தெரியவில்லை. இதனால் பலர் ஏலத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    விண்ணப்பம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் விதிமீறல் நடக்கிறது. வெளிப்படைத்தன்மையுடன் ஏலத்தை நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் எல்.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.

    ஏலத்தில் பங்கேற்க விரும்பும் அனைவருக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாகவும், ஏலத்தில் பங்கேற்க ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பம் போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×