search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 564 இடங்களில் வடிகால் கட்டும் பணி தீவிரம்
    X

    கோப்பு படம்

    சென்னையில் 564 இடங்களில் வடிகால் கட்டும் பணி தீவிரம்

    • தியாகராயநகர், பாண்டிபஜார் பகுதியிலும் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியதுதான் வியப்பிலும் வியப்பாக இருந்தது.
    • மழைநீர் வடிகால் அகலமாக இல்லாததும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் வட சென்னை, தென்சென்னை பகுதிகளில் பல சாலைகள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாக உள்ளது.

    சென்னையின் வர்த்தக பகுதியான தியாகராயநகர், பாண்டிபஜார் பகுதியிலும் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியதுதான் வியப்பிலும் வியப்பாக இருந்தது.

    கடந்த பருவ மழையின்போது இந்த பகுதிகளில் மழைநீர் வடிய 1 வார காலம் ஆனது. மாம்பலம் கால்வாய் பகுதிக்கு செல்லும் பிரதான மழைநீர் வடிகால் பகுதிகளில் சரி வர தூர்வாராததே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது.

    பாண்டிபஜாரில் ஸ்மார்ட் சிட்டி சரிவர இல்லாததும் இதற்கு காரணம் என அறியப்பட்டது.

    இதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் மழைநீர் வடியாமல் போனதற்கு தூர்வாரும் பணியில் உள்ள குறைபாடுகளே காரணம் என கண்டறியப்பட்டது.

    அது மட்டுமின்றி மழைநீர் வடிகால் அகலமாக இல்லாததும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.

    இவற்றை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த பருவ மழையின்போது தண்ணீர் தேங்காத அளவுக்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதுமட்டுமின்றி திருப்புகழ் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆலோசனை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் திருப்புகழ் தலைமையிலான குழுவினர் சென்னை மற்றும் புறநகரில் ஐ.ஐ.டி. நிபுணர்களுடன் சென்று மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    அது மட்டுமின்றி சென்னையின் பிரதான சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களை அகலப்படுத்தி கூவம், பக்கிங்காம் கால்வாய், மாம்பலம் கால்வாய், அடையாறு நல்லான் கால்வாய் பகுதிகளில் சேரும் வகையில் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து இருந்தனர்.

    பிரதான கால்வாய்களை பருவ மழை காலத்துக்கு முன்பே அதாவது செப்டம்பர் மாதத்திற்குள் தூர் வார வேண்டும் என்று அரசை கேட்டுக் கொண்டார்.

    அதன் அடிப்படையில் சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய்களை தூர்வாரும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 40.80 கி.மீ. நீளத்துக்கு தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதாவது 32 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

    முடிவுற்ற பணிகளில் முக்கியமானதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் காலனி, தி.நகர் ஜி.என்.செட்டி சாலை, பசுல்லா சாலை, கே.கே.நகர் ராஜ மன்னார் சாலை, அசோக் நகர், வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலை, ரிப்பன் பில்டிங் அஜீஸ்நகர், பராங்குசபுரம் ஆகிய பகுதிகளில் முழுமையாக பணிகள் முடிந்துள்ளது.

    இதேபோல் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் 2-வது பகுதியாக 20.03 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 12 சதவீத பணிகள் முடிந்துள்ளது.

    அம்பத்தூர், கொளத்தூர், கத்திவாக்கம், எண்ணூர் பகுதிகளிலும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன. கோவளம், கொசஸ்தலை ஆறு பகுதிகளிலும் 1173.88 கி.மீ. நீளத்துக்கு ரூ.5,054 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னையை பொறுத்த வரை மழைநீர் தேங்கும் பகுதியாக 564 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் இந்த முறை மழைநீர் தேங்காத அளவுக்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    திருப்புகழ் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவினர் அளித்துள்ள பரிந்துரையை ஏற்று ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஆலோசனைப்படி இங்கு மழைநீர் வடிகால் வதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் மழை காலத்துக்கு முன்பாகவே ஒரே நேரத்தில் 1058 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருவது இதுவே முதல் முறையாகும். இந்த பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.

    இந்த பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

    Next Story
    ×