search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சங்க இலக்கியங்களை மொழி பெயர்க்கும் பணி நடைபெறுகிறது- செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தகவல்
    X

    சங்க இலக்கியங்களை மொழி பெயர்க்கும் பணி நடைபெறுகிறது- செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தகவல்

    • குஜராத்தியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.
    • தொல்காப்பிய இலக்கண நூல், இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகர், வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இதையொட்டி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை மத்திய அரசு வெளியிட்டு சிறப்பு செய்கிறது. சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, ஒடியா, மலையாளம், சௌராஷ்ட்ரி, வாக்ரி போலி, படகா, நேபாளி, அரபி, உருது, பாரசீகம், கெமர் ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் 13 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் நூல்களை பிரதமர் வெளியிட்டு சிறப்பித்தார். ஏற்கனவே பஞ்சாபி, மணிப்புரி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. குஜராத்தியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர்மோடி 2015 ஆம் ஆண்டு வெளியிட்டார்.


    பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவது தமிழுக்கு பெருமை சேர்ப்பதாகும். ஐரிஷ், தாய், மலாய், பர்மீஸ், டேனிஷ், கொரியா, ஜப்பானீஸ் போன்ற வெளிநாடுகளின் மொழிகளிலும் திருக்குறளை மொழியாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    திருக்குறள் தவிர சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் மொழிபெயர்த்து, தமிழின் பெருமையை உலகறியச் செய்வது மத்திய அரசின் நோக்கம். அந்தப் பணியை செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் செய்து வருகிறது. தொல்காப்பிய இலக்கண நூல் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதால், வடமாநிலங்களில் ஒப்பிலக்கண ஆய்வுக்கு அது பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×