search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வரி செலுத்தாத 3.50 லட்சம் பேரின் வீடுகளை ஜப்தி செய்ய சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு
    X

    வரி செலுத்தாத 3.50 லட்சம் பேரின் வீடுகளை ஜப்தி செய்ய சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு

    • 2 ஆண்டுகளுக்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்துள்ளோர் விபரங்களையும், மாநகராட்சி சேகரித்து வருகிறது.
    • சொத்து உரிமையாளர்களின் சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள கியூ.ஆர். குறியீடு உதவியுடன் சொத்து வரியினை செலுத்தலாம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி பிரதான வருவாயாக உள்ளது. மொத்தமுள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு 750 கோடி ரூபாய் என, ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வசூலாகிறது.

    ஆனால், 13 லட்சம் சொத்து உரிமையாளர்களில், 3.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் முறையான வரி செலுத்தாமல் உள்ளனர். இவர்களால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சொத்து வரி குறைவாக கணக்கிடப்பட்ட 3 லட்சம் சொத்து உரிமையாளர்களின் சொத்துக்கள் மறுமதிப்பீடு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

    அதேபோல், 2 ஆண்டுகளுக்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்துள்ளோர் விபரங்களையும், மாநகராட்சி சேகரித்து வருகிறது.

    அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் 3.50 லட்சம் சொத்து உரிமையாளர்கள், 200 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாமல் உள்ளனர். நிலுவையை வசூலிக்க, மாநகராட்சி அதிரடியாக களம் இறங்கியுள்ளது.

    இதற்கிடையே இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சொத்துவரியை மார்ச் 31-ந் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள வரித்தொகை மீது, மாதத்திற்கு 1 சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 13 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களில், தற்போது நிலுவை சொத்துவரி செலுத்தாத 3.50 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்து உரிமையாளர்களின் நிலுவை வரித்தொகை மீது, மேற்படி சட்ட விதிகளின்படி 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்பட் டுள்ளது.

    சொத்து வரி உரிமையாளர்கள் நிலுவை சொத்துவரியினை எவ்வித சிரமுமின்றி, கீழ்கண்ட வழிமுறைகள் மூலம் எளிதாக செலுத்தலாம்.

    1. வரிவசூலிப்பாளர்களின் மூலமாக, ஸ்வைப்பிங் வசதியுடன் கூடிய கையடக்ககருவி உதவியுடன், கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலமாக செலுத்தலாம்.

    2. மண்டலம், வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களில் சொத்துவரி செலுத்தலாம்.

    3. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்தம் இயற்றியுள்ள குறிப்பிட்ட வங்கிகளில், நேரடியாக பணமாக செலுத்தலாம்.

    4. 'நம்ம சென்னை' செயலி மற்றும் 'பே.டி.எம்.' – முதலிய கைப்பேசி செயலி மூலமாக செலுத்தலாம்.

    5. பி.பி.பி.எஸ். (பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்) என்ற சேவை மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம்.

    6. பெருநகர சென்னை மாநகராட்சியின் இணைய தளம் www.chennaicorporation.gov.in வாயிலாக, இணைய வழி செலுத்துதல் மூலம், பரிமாற்றக் கட்டணம் இல்லாமல் செலுத்தலாம்.

    7. சொத்து உரிமையாளர்களின் சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள கியூ.ஆர். குறியீடு உதவியுடன் சொத்து வரியினை செலுத்தலாம்.

    8. வருவாய் துறை தலைமையிடத்தில், நிறுவப்பட்டுள்ள கியோஸ்க் என்ற தானியங்கி கருவின் மூலம், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரி காசோலையினை எளிதாக செலுத்தி, சொத்து வரி ரசீதுகளை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிவுறுத்தலுக்குப் பிறகும் சொத்து வரி செலுத்தாவிட்டால் வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என்று மாநகராட்சி வருவாய் துறையினர் கூறி உள்ளனர். பிறகு அந்த சொத்துக்கள் சட்டப்படி ஏலம் விடப்பட்டு வரி வசூலிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×