search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு
    X

    தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது.
    • தமிழகத்தின் வட மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், கடந்த 17-ந் தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக பகுதிகளை நோக்கி வரும், கன மழை இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இது இந்த பருவமழை காலத்தின் 3-வது மழைப்பொழிவாக பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை பெரிய அளவில் பெய்யவில்லை. ஆனால் அதேநேரத்தில் சென்னை உள்பட உள்மாவட்டங்களில் மலை பிரதேசங்களில் இருப்பது போன்ற குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    இதற்கு காரணமாக, மே மாதங்களில் ஏதாவது புயல், தாழ்வு மண்டலம் உருவாகும்போதோ அல்லது அது கடந்து செல்லும்போதோ எப்படி வட இந்திய பகுதிகளில் உள்ள வறண்ட காற்று உள்ளிழுக்கப்பட்டு வெப்பம் எப்படி அதிகரிக்கிறதோ?, அதேபோல்தான் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதிகளுக்கு அருகில் வந்தததால், வட இந்திய பகுதிகளில் உள்ள குளிர்ந்த காற்றை இழுத்து சென்னை மற்றும் உள் மாவட்டங்களில் குளிர்ச்சியான சூழலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதுவும் தமிழகத்தின் வட மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

    அதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு தமிழகத்தில் குறைவாக இருப்பதாகவும், இந்த இடைவெளிக்கு பிறகு, டிசம்பர் 2-வது வார தொடக்கத்திலோ அல்லது 3-வது வாரத்திலோ இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு வானிலை நிகழ்வு ஏற்பட உள்ளதாகவும், அதன் காரணமாக மீண்டும் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிகழ்வு புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்துக்கே அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு மைய வட்டாரங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

    Next Story
    ×