search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காலை, மாலையில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிக கட்டணம்- 25 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு
    X

    காலை, மாலையில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிக கட்டணம்- 25 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு

    • அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நேரத்திற்கு ஏற்ப 25 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
    • கட்டண விவரம் குறுந்தகவல் மூலம் செல்போனில் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.

    சென்னை:

    நாடு முழுவதும், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் மின்சார பயன்பாடு அதிகமாக உள்ளது.

    எனவே இந்த நேரங்களில் வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்த நிறுவனங்களுக்கான மின்சார தேவையை பூர்த்தி செய்வது மின்சார வாரியத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.

    எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய மின் கட்டண விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்காக மத்திய மின்துறை அமைச்சகம், மின்சார நுகர்வோர் உரிமை விதிமுறைகளில் 2 திருத்தங்களை செய்து உள்ளது.

    அதில் ஒன்று, நேரத்திற்கு ஏற்ற மின் கட்டண பட்டியல், மற்றொன்று 'ஸ்மார்ட் மீட்டர்' விதிமுறைகளை எளிமையாக்குதல் ஆகும். இந்த 2 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மத்திய மின் துறை மந்திரி ராஜ்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மின் கட்டணத்தை கணக்கெடுக்க ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்திய பிறகு விவசாயத்துக்கு மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் தவிர மற்ற அனைத்து நுகர்வோர்களுக்கும் நேரத்திற்கு ஏற்ற மின்சார கட்டணத்தை அமல்படுத்துவதற்காக விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி 10 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்ட தேவை கொண்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நேரத்திற்கு ஏற்ப 25 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    10 கிலோ வாட்டுக்கு குறைவான மின் தேவை கொண்டவர்களுக்கும், வீடுகளுக்கும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நேரத்திற்கு ஏற்ப மின் கட்டணம் 25 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.

    இந்த புதிய விதிமுறையின்படி காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணம் 25 சதவீதம் அதிகரிக்கும். அதே நேரத்தில் மற்ற நேரங்களில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணம் குறைவாக இருக்கும்.

    அதிக மின் பயன்பாட்டு நேரங்கள் மற்றும் குறைந்த மின் பயன்பாட்டு நேரத்துக்கு எவ்வளவு கட்டணம் என்பது வெளியிடப்படும். இதன்படி பொதுமக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி கூடுதல் செலவை தவிர்க்க முடியும். குறைவான மின் கட்டணம் உள்ள நேரத்தில் வாஷிங்மிஷின் உள்ளிட்ட மின்சார கருவிகளை பயன்படுத்தி கட்டணத்தை சேமிக்க முடியும்.

    இந்த புதிய நடைமுறை நுகர்வோர் மற்றும் மின் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும்போது மின்சாரத்தை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எளிமையாக்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் மூலம் ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று மின்சார பயன்பாடு அளவு குறித்து கணக்கெடுக்க வேண்டியதில்லை. ஸ்மார்ட் மீட்டரில் உள்ள மென்பொருள் மூலம் மின் பயன்பாட்டை அந்த மீட்டர் தானாகவே கணக்கெடுத்து விடும். கட்டண விவரம் குறுந்தகவல் மூலம் செல்போனில் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.

    தினமும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறோம் என்பதையும், கட்டணம் எவ்வளவு என்பதையும் பொதுமக்கள் மீட்டரிலேயே பார்க்க முடியும். இதில் தற்போதுள்ள பிரச்சினைகளை சரி செய்து எளிமைப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×