search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது: 93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
    X

    சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது: 93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

    • தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவு விரைவாக வெளியிடப்பட்டுள்ளது.
    • கல்லூரிகளில் சேர முடியாமல் இருந்து வந்த மாணவ-மாணவிகள் இன்று விண்ணப்பிக்கத் தொடங்கினர்.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு ஏப்ரல் மாதம் 26-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 15-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் முடிவுக்காக காத்து இருந்தனர்.

    ஆனால் தேர்வு முடிவு வெளியாவது தாமதம் ஆனது. இதனால் மாணவ-மாணவிகள் பலர் கல்லூரியில் சேருவதில் சிரமம் ஏற்பட்டது.

    பொறியியல் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருந்ததால் தங்களுக்கு இடங்கள் கிடைக்குமா? என்ற பதட்டத்தில் இருந்தனர்.

    ஆனால் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவு வரும் வரையில் மாணவர் சேர்க்கையை முடிக்கக்கூடாது என அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலை மானியக்குழு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகின. www.cbse.nic.in, cbse.gov.in, DigiLocker ஆகிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

    இந்த தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் குறைவாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 91.25 சதவீதமும், மாணவிகள் 93 சதவீதமும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முடிவுகளை இணையதளத்திலும், பள்ளியிலும் நேரில் சென்று முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

    சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவு எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென வெளியானதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர்களும் உற்சாகம் அடைந்தனர்.

    கல்லூரிகளில் சேர முடியாமல் இருந்து வந்த மாணவ-மாணவிகள் இன்று விண்ணப்பிக்கத் தொடங்கினர். ஆன்லைன் வழியாக பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தனர்.

    தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து உயர் கல்வியில் சேருவதற்கான அவகாசம் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 27-ந்தேதி வரை பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பதட்டம் அடைய தேவையில்லை என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    `உயர்கல்வியில் சேர முடியாத நிலைமையை எடுத்துக் கூறியதை தொடர்ந்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

    பிளஸ்-2 முடிவை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று பிற்பகல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×