search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுபான விடுதி விபத்து தொடர்பாக 12 பேர் மீது வழக்கு
    X

    சென்னை, ஆழ்வார்பேட்டை மதுபான விடுதியில் நேற்று இரவு மேற்கூரை இடிந்து 3 பேர் பலியானதையொட்டி விடுதியை ‘சீல்’ வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை காணலாம்.

    மதுபான விடுதி விபத்து தொடர்பாக 12 பேர் மீது வழக்கு

    • விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
    • மேக்ஸ், லவ்லி ஆகிய இருவரும் மேசையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நேற்று மாலை 6.45 மணி அளவில் முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் கட்டிட இடிபாட்டில் சிக்கி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேக்ஸ் என்ற வாலிபர், திருநங்கை லவ்லி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன் ராஜ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

    கட்டிடம் இடிந்து விழுந்தபோது டமார் என்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதுமே அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தென்சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மதுபான விடுதி கட்டிடம் இடிந்தது தொடர்பாக அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 304-ஐ.பி.சி. சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுபான விடுதி விபத்து தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவரிடம் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற 11 பேர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கட்டிடம் இடிந்து விபத்து நடைபெற்ற பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுபான விடுதி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு விபத்து நடந்திருக்கலாம் என்றே முதலில் கருதப்பட்டது. ஆனால் இதனை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.

    நாங்கள் இன்னும் மெட்ரோ ரெயில் பணிக்காக சுரங்கத்தில் துளைபோடும் பணியை தொடங்கவே இல்லை என்றும், எனவே கட்டிட விபத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் காரணம் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    மதுபான விடுதி கட்டிடம் இடிந்து விழுந்தபோது அதனை அங்கிருந்த ஊழியர்கள் சிலர் நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

    இதுபற்றி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த துவாம் என்ற வாலிபர் கூறியதாவது:-

    மாலை 3 மணியில் இருந்து 6.45 மணி வரை மதுபான விடுதியில் வேலை செய்யும் 15 பேர் ஓய்வுக்காக சென்றிருந்தனர். இருப்பினும் 14 பேர் வரை மதுபான கூடத்தில் இருந்தோம். மதுபான விடுதிக்கு வெளியில் இருந்து வாடிக்கையாளர்கள் வர தொடங்கினார்கள்.

    இதனால் மேக்ஸ், லவ்லி ஆகிய இருவரும் மேசையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சைக்ளோன் ராஜ் அவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

    இந்த நேரத்தில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி கிடந்த அவர்களை எங்களால் மீட்க முடியவில்லை.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவியாய் தவித்தோம். எங்கள் கண்முன்னே எல்லாம் ஒரு நொடியில் முடிந்து போய் விட்டது. கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், மற்ற ஊழியர்கள் எல்லாம் வெளியில் அலறியடித்து ஓடிவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரவு 10 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்திருந்தால் நூற்றுக்கணக்கானோர் விடுதியில் மதுபோதையில் இருந்திருப்பார்கள். இதனால் உயிர்சேதம் அதிகரித்திருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மதுபான விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. மெட்ரோ ரெயில் பணிகள் விபத்துக்கு காரணம் இல்லை என்பது தெரியவந்துள்ள நிலையில் விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் விபத்து நடந்துள்ளதா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட மதுபான விடுதியில் உரிமையாளரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உயிரிழந்த 3 பேரின் உடல்களும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மதுபான விடுதியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

    Next Story
    ×