search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை தேர்வு செய்யும் வியாபாரிகள்.
    X
    மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை தேர்வு செய்யும் வியாபாரிகள்.

    மேலப்பாளையம் சந்தையில் விற்பனைக்கு குவிந்த 20 ஆயிரம் ஆடுகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடு, மாடுகளை இன்று சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், வள்ளியூர், முக்கூடலிலும், தென்காசி மாவட்டத்தில் ரெட்டியார்பட்டி, கடையம், பாம்புகோவில், நயினாகரம், தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், புதியம்புத்தூர், கயத்தாறு உள்ளிட்ட இடங்களில் கால்நடை சந்தைகள் நடைபெற்று வருகிறது.

    மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மேலப்பாளையம் சந்தை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சந்தையில் கூடுவார்கள்.

    இந்த சந்தையில் வாரந்தோறும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே போல் ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை நடக்கும்.

    இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் தற்போது சித்திரை மாதம் பிறந்துள்ளதையடுத்து பல்வேறு கோவில்களில் கொடைவிழாக்கள் நடத்தப்படும். இந்த விழாக்களில் பக்தர்கள் நேமிசங்கள், படையலிட்டு வழிபடுவார்கள் என்பதால் இன்று மேலப்பாளையம் சந்தை களைகட்டி காணப்பட்டது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடு, மாடுகளை இன்று சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    இதில் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் 20 ஆயிரம் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அவற்றை வாங்க ஆயிரக்கணக்கான பொதுமக்களும், 100-க்கணக்கான வியாபாரிகளும் சந்தையில் திரண்டனர். ஏராளமானவர்கள் ஒன்றிற்கும் அதிகமான ஆடுகளை வாங்கி சென்றனர்.

    சித்திரை திருவிழாவையொட்டி சீவலப்பேரியை சேர்ந்த வியாபாரி ஒருவர் 250 ஆடுகளை வாங்கி சென்றார். இதேபோல் பல வியாபாரிகள் ஆடுகளை மொத்தமாக வாங்கியதை காணமுடிந்தது. ஆடுகளின் எடைக்கேற்ப ஒரு ஆடு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மக்கள் கூட்டத்தால் மேலப்பாளையம் கால்நடை சந்தை இன்று திருவிழா போல் காணப்பட்டது.

    இதேபோல் மாடுகள், கோழி உள்ளிட்டவைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.
    Next Story
    ×