search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    சாலை பராமரிப்பில் ரூ.3 கோடி ஊழல்: கரூர் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்-3 பேர் சஸ்பெண்டு

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த புகாரின் பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கரூர்:

    கரூர் மாவட்ட நெடுஞ்சாலை துறையில் சாலை அமைக்காமலேயே, அமைத்து விட்டதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்துவிட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தமிழக போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், இந்த புகாரை எழுப்பி இருந்தார்.

    இது தொடர்பாக அவர் கடந்த 6-ந்தேதி கட்சியினருடன் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரை சந்தித்து புகார் மனு அளித்தார்.

    அதில், புகழூர் புறவழிச்சாலை முதல் புகழூர் அரசு மேல் நிலை பள்ளி வழியாக, புகழூர் சர்க்கரை ஆலை வரை புதியதாக சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் சில சாலை பணிகளை இன்ப்ரோ ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டது. இதில் சாலை அமைக்காமலேயே, அதிகாரிகள் துணையுடன் ரூ.3 கோடி அளவுக்கு சாலை அமைத்துவிட்டதாக கணக்கு காட்டப்பட்டு ஊழல் நடந்துள்ளது என தெரிவித்து இருந்தார்.

    மேலும் இந்த புகார் தொடர்பாக சென்னையில் தலைமைச் செயலாளரிடமும் கடந்த 8-ந்தேதி மேற்கண்ட ஊழல் குறித்து ஆதாரங்களுடன் விரிவான புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அன்று இரவோடு இரவாக அவசர கதியில் கரூர் ஈசநத்தம் கூம்பூர் வீரியபட்டி சாலை பணிகளை அவசர கதியில் புகாருக்கு ஆளான சங்கர் ஆனந்த் தரப்பினர் பணிகளை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

    இந்த பணிகள் தொடர்பான வீடியோ பதிவை பொதுமக்கள் வாயிலாக புகார்தாரர்கள் பெற்றனர். இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இன்று திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபால சிங், கரூர் கோட்ட கணக்காளர் பெரியசாமி ஆகிய 4 பேரை சஸ்பெண்டு செய்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த புகாரின் பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகாருக்கு ஆளான ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்துக்கு சொந்தமான எம்.சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி கோடங்கிபட்டி அருகே நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×