search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்
    X
    கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்

    மதுரையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 91 ஆசிரியைகள் கைது

    மதுரையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியைகள் 91 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியைகள் அனைவரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    மதுரை:

    மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 234 பெண் ஆசிரியர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்கள் பள்ளி கல்வித்துறையில் நடைபெற உள்ள பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். அதற்காக மதுரையில் உள்ள கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்படவில்லை.

    இந்தநிலையில் 7 பேருக்கு மட்டும் தடையில்லா சான்று வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மதுரை அண்ணா பஸ் நிலையம் எதிரே உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் இணை இயக்குநர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

    தங்களுக்கும் தடையில்லா சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தி இணை இயக்குநர் செல்வ ராஜை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் அனைவரும் இணை இயக்குநர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்த தல்லாகுளம் போலீஸ் உதவி கமி‌ஷனர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் இணை இயக்குநர் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களது போராட்டம் இரவிலும் நீடித்தது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 91 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் வெவ்வேறு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். தங்க வைக்கப்பட்டிருந்த மண்டபத்திலும் ஆசிரியைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×