search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து கருகி இருப்பதை காணலாம்
    X
    தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து கருகி இருப்பதை காணலாம்

    காதி கிராப்ட் குடோனில் பயங்கர தீ விபத்து- ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

    உசிலம்பட்டியில் இன்று அதிகாலை காதி கிராப்ட் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழப்புதூரில் மதுரை நெடுஞ்சாலையில் காதி கிராப்ட் குடோன் உள்ளது.

    இங்கு சேகரித்து வைக்கப்படும் பருத்தி நூல், ஆடைகள், கையுறை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காதி கிராப்ட் விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த குடோனில் பெரும்பாலும் பொருட்கள் குவிந்து கிடக்கும்.

    அவ்வப்போது பணியாளர்கள் குடோனுக்கு வந்து பொருட்களை சரி பார்த்து அதனை காதி கிராப்ட் விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மற்ற சமயம் குடோன் பூட்டியே கிடக்கும். காவலாளிகளும் நியமிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் குடோன் பூட்டை உடைத்து பார்த்தபோது அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மளமளவென எரியத் தொடங்கியிருந்தன. குடோன் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதையடுத்து கூடுதலாக டி. கல்லுப்பட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இருப்பினும் குடோனில் இருந்த 90 சதவீத பொருள்கள் முற்றிலும் எரிந்து பயன்படுத்தப்பட முடியாத நிலைக்கு கருகின. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தன.

    இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    காதி கிராப்ட் மேலாளர் அய்யணன் கூறுகையில், குடோனில் விற்பனைக்காக பருத்தி நூல், தூய்மை பணியாளர்களுக்கான கையுறைகள், ஆடைகள், பஞ்சு மற்றும் விற்பனைப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இவை மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இன்று நடந்த தீவிபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டன. இதன் மதிப்பு ரூ 25 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என தெரிவித்தார்.


    Next Story
    ×