search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    அரசு கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

    கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவது அவர்களின் பணி நிலையையும், ஊதியத்தையும், பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தையும் கடுமையாக பாதிக்கும்.

    கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, படிநிலை சார்ந்த பதவி உயர்வு என்பது கவுரவம் சார்ந்த வி‌ஷயமும் ஆகும். கடந்த சில பத்தாண்டுகளில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்கள் சராசரியாக 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடக்கின்றன. ஒருவர் முனைவர் பட்டம் அல்லது தேசிய, மாநிலத் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று உதவிப் பேராசிரியர் பணியில் சேர 35 முதல் 40 வயதாகிவிடும்.

    உதவிப் பேராசிரியராக பணியில் சேரும் ஒருவர் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு 16 ஆண்டுகள் ஆகும். 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றும் ஒருவர் மூத்த பேராசிரியராக பதவி உயர்த்தப்படுவார். கடந்த காலங்களில் உதவிப் பேராசிரியராக பணியில் சேருபவர்கள் எளிதாக மூத்த பேராசிரியர் நிலையை அடைந்து ஓய்வு பெற முடியும். ஆனால், இப்போது போதிய அளவில் பணி நியமனங்கள் நடக்காததால் பணியில் சேர அதிக வயது ஆவது, பதவி உயர்வில் செய்யப்படும் தாமதம் ஆகியவற்றால் பேராசிரியர் என்ற நிலைக்கு உயர்வதே மிகவும் கடினமாக இருக்கிறது.

    மூத்தப் பேராசிரியர் என்ற நிலையை அடைவது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. இவை அனைத்துக்கும் காரணம் பதவி உயர்வு வழங்கப்படாதது தான்.

    கல்லூரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாததால் ஏற்படும் பாதிப்புகள் அவர்களுடன் முடிந்து விடுவதில்லை. பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காததால் மனச்சோர்வும், மன உளைச்சலுக்கும் ஆளாகும் ஆசிரியர்கள், விரக்தியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகளை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×