search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    நெய்வேலியில் 3-வது சுரங்கம் தோண்ட நிலம் கொடுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை- ராமதாஸ் வலியுறுத்தல்

    நெய்வேலியில் 3-வது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்;. வீட்டுமனைகளுக்கு சென்ட்டுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 3-வது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் 12,125 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகம், அதற்கான புதிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. பாதிக்கப்படும் மக்களின் எதிர்பார்ப்புகளை சிறிதும் நிறைவேற்றாத அத்திட்டம், தொடக்க நிலையிலேயே கடும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது.

    கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் முப்போகம் விளையக்கூடியவை.நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் மட்டுமின்றி முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் கூட விளைகின்றன. ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக் கூடிய வளமான நிலங்கள் அவை. இழப்பீடாக என்.எல்.சி வழங்க முன்வரும் தொகையை இரு ஆண்டுகளில் உழவர்கள் ஈட்டி விடுவர்.

    இந்த நிலங்கள் ஏக்கருக்கு ரூ.60 லட்சம் முதல் 70 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், அவற்றுக்கு மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ரூ.23 லட்சம் மட்டும் வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. அதேபோல், வீட்டுமனைகள் சென்ட் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், அவற்றுக்கு நான்கில் ஒரு பங்கு முதல் எட்டில் ஒரு பங்கு வரை மட்டுமே தருவது மக்களைச் சுரண்டும் செயலாகும். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    நெய்வேலியில் 3-வது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்;. வீட்டுமனைகளுக்கு சென்ட்டுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். நிலம் வழங்கும் குடும்பங்களில் இருந்து குறைந்தது ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்.

    இவற்றை செய்யாமல் அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறிக்கலாம் என்று என்.எல்.சி நிர்வாகம் நினைத்தால் அதை பா.ம.க. அனுமதிக்காது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மக்களைத் திரட்டி போராடுவதற்கும் பா.ம.க. தயங்காது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×