search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கொரோனா பயம் காரணமாக தனியார் பரிசோதனை கூடங்களில் வரிசை கட்டும் பொதுமக்கள்

    வெளியூருக்கு சென்று திரும்பி வந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. மீண்டும் மும்பை, பெங்களூர், டெல்லி என்று எங்காவது விமானத்தில் செல்ல நேர்ந்தால் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்.

    சென்னை:

    கொரோனா பரவல் அதிகரித்து வருவது மன ரீதியாக பலரிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் கூட தனியார் பரிசோதனை கூடங்களுக்கு சென்று ‘டெஸ்ட்’ எடுத்து பார்த்து கொள்கிறார்கள்.

    பக்கத்து வீடுகளில் அல்லது தெரிந்தவர்கள், அல்லது தான் சென்று வந்த நிறுவனங்களில் கொரோனா தொற்று உறுதியானது தெரிய வந்தால் உடனே பயந்து நேரடியாகவே ஆய்வகங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்கிறார்கள்.

    இதனால் தனியார் ஆய்வகங்களில் தினமும் கூட்டம் வரிசைகட்டி நிற்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை தினமும் சராசரியாக 100 மாதிரிகள் வரை சோதனை செய்ததாகவும் பின்னர் மெல்ல மெல்ல அதிகரித்து இப்போது 300 முதல் 400 பேர் தினமும் பரிசோதனை செய்து கொள்ள வருவதாகவும் தனியார் ஆய்வக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

    இது ஒரு ஆய்வகத்தில் உள்ள நிலைமை இதேபோல் தான் அனைத்து ஆய்வகங்களிலும் தினசரி பரி சோதனை எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறினார்கள்.

    சில மாநிலங்களிலும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கும், கொரோனா பரிசோதனை சான்றிதழ் விமான நிலையங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் பலர் கொரோனா பரிசோதனை மேற்கொள்கிறார்கள்.

    வெளியூருக்கு சென்று திரும்பி வந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. மீண்டும் மும்பை, பெங்களூர், டெல்லி என்று எங்காவது விமானத்தில் செல்ல நேர்ந்தால் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்.

    இன்னும் சிலர் பரிசோதனை முடிவு ‘நெகட்டிவ்’ என்று வந்தாலும் மீண்டும் மற்றொரு ஆய்வகத்தில் பரிசோதனை செய்து உறுதிப்படுத்தி கொள்கிறார்கள்.

    மொத்தத்தில் தனியார் ஆய்வகங்களில்தான் கூட்டம் வரிசை கட்டுகிறது. இது ஒரு வகையில் அந்த ஆய்வகங்களுக்கு வருமானம் ஈட்ட வாய்ப்பாக இருந்தாலும் பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஆவதாக கூறுகிறார்கள்.

    முன்பு மாதிரிகள் குறைவாக இருந்ததால் 3 முதல் 4 மணி நேரங்களில் ரிசல்ட் கொடுக்கப்பட்டதாகவும் இப்போது முடிவுகளை அறிவிக்க ஒரு நாள் ஆவதாகவும் கூறினார்கள்.

    Next Story
    ×