search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பரிசு தொகுப்பு
    X
    பொங்கல் பரிசு தொகுப்பு

    பொங்கல் பரிசு தொகுப்பு - அரசு விளக்கம்

    கொரோனா கட்டுப்பாடுகளால் பைகள் தைக்கும் பணியில் சில இடங்களில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
    சென்னை: 

    பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 

     தமிழ்நாட்டிலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகை பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றன.  

    இதுவரை 45.1 % அட்டைதாரர்களுக்குத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்புகளுக்கான பொருள்கள் முழுமையாக இருந்தும், சில பகுதிகளுக்குப் பைகள் முழுமையாக வந்து சேராததால் தொகுப்புகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  

     ஓமைக்ரான் தொற்றைச் சமாளிப்பதற்காக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக பைகள் தைக்கும் பணியில் சில இடங்களில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விரைந்து வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு, பைகள் முழுமையாக கிடைக்கப் பெறாத பகுதிகளில் இந்தப் பைகள் இல்லாமல் 20 பொருள்களைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பயனாளிகளுக்கு பரிசுத் தொகுப்பினை வழங்கிடவும், அவர்களுக்குப் பைகளைப் பின்னர் வழங்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  

    இவ்வாறு பைகள் இல்லாமல் பொருள்களை வாங்க விரும்பும் பயனாளிகள் தங்கள் பைகளைக் கொண்டு வந்து தொகுப்புகளைப் பெற்றுச் செல்லலாம். பைகள் இன்றி பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறும் பயனாளிகள் பின்னர் பிற பொது விநியோகத் திட்டப் பொருள்களை வாங்க வரும்போது பைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 

    இதற்காக, பைகள் இல்லாமல் பரிசுத் தொகுப்பை வாங்கும் பயனாளிகளுக்கு தனியே டோக்கன் வழங்கப்படும். இந்த நெறிமுறைகளைக் கடைபிடித்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்குமாறு பொது விநியோகத் திட்ட அலுவலர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

    இவ்வாறு அந்த அறிகையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×