search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்னாள் அமைச்சர் தங்கமணி
    X
    முன்னாள் அமைச்சர் தங்கமணி

    தங்கமணியின் வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு

    முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 69 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.2 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 458 ரொக்கம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி வீடுகள் உள்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.

    சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல்லில் 33 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.

    கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி முதல் கடந்த ஆண்டு மே மாதம் 6-ந்தேதி வரை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தங்கமணியும், அவரது குடும்பத்தினரும் வாங்கி குவித்து இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தங்கமணியின் மனைவி, மகன், மகள் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள கோவிந்தம் பாளையத்தில் உள்ள தங்கமணியின் வீட்டில் நேற்று காலை 6 மணி அளவில் துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணா மூர்த்தி தலைமையிலான போலீசார் சோதனையை தொடங்கினார்கள். இந்த சோதனை நேற்று இரவு 8.30 மணி அளவில் நிறை வடைந்தது. இதன் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கமணி வீட்டில் 14½ மணி நேரம் சோதனை நடத்தி உள்ளனர்.

    69 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.2 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 458 ரொக்கம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    செல்போன், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    தங்கமணி குடும்பத்தினர் மற்றும் அவருக்கு தொடர்புடைய வீடுகளில் கைப்பற்றப்பட்ட வங்கி லாக்கர் சாவிகளை வைத்து திறந்து பார்த்து ஆய்வு செய்யவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக வங்கி அதிகாரிகளை சந்தித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகு இன்று அல்லது நாளை தங்கமணி மற்றும் அவரது உறவினர்களின் வங்கி லாக்கர்கள் திறக்கப்பட உள்ளன.

    வங்கி லாக்கர்களில் என்னென்ன ஆவணங்கள் உள்ளன என்பது அப்போது தெரிய வரும். அதில் கைப்பற்றப்படும் ஆவணங்களின் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    வங்கி மேலாளர் அனுமதியுடன் போலீசார் முன்னிலையில் லாக்கர்களை வங்கி ஊழியர்கள், திறந்து காண்பிப்பார்கள். அதில், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் நகைகள், பணம் முதலீடு செய்த பத்திரங்கள், சொத்து பத்திரங்கள், வெளிநாடு கரன்சி பத்திரங்கள், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த ஆவணங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    விசாரணை

    இதேபோல் கைப்பற்றப்பட்ட கணினி ஹார்டு டிஸ்க்குகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதில் தொழில் பரிவர்த்தனை தகவல், ஆன்லைனில் பணம் பரிவர்த்தனை செய்த தகவல்கள் இருக்கிறதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


    Next Story
    ×