search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீனவர்கள்
    X
    மீனவர்கள்

    கச்சத்தீவு அருகே பாட்டில்-கற்களை வீசி ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

    இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கியதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
    ராமேசுவரம்:

    கனமழை, புயல் சின்னம், சூறாவளி போன்றவை காரணமாக ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

    நேற்று மீன்வளத்துறை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அவர்கள் சென்றனர்.

    இதில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் சிறிய பிளாஸ்டிக் படகில் வந்தனர். அவர்களை கண்டதும் ராமேசுவரம் மீனவர்கள் அச்சமடைந்தனர்.

    அப்போது இலங்கை கடற்படையினர், இங்கு மீன் பிடிக்கக்கூடாது. உடனே புறப்பட்டு செல்லுங்கள் என ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார்கள்.

    அந்த நேரத்தில் திடீரென இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி மீனவர்களை தாக்கினர். இதில் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்தன. இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்ததாக இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது:-

    இந்திய எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை விரட்டியடித்தனர். பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்கியதால் அவசரம் அவசரமாக கரை திரும்பி விட்டோம். இயற்கை சீற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக கடலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. நேற்றுதான் மீன்பிடிக்க சென்றோம்.

    ஆனால் இலங்கை கடற்படையினர் தாக்கியதால் மீன் பிடிக்க முடியாமல் திரும்பி விட்டோம். ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை தாக்குதலுக்கு ஆளாகும் போதும் இனி இதுபோன்று நடக்காது என மத்திய-மாநில அரசுகள் கூறுகின்றன. ஆனால் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×