search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    தொடர்ந்து ஏறுமுகம்- தக்காளி கிலோ ரூ.130-க்கு விற்பனை

    தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    போரூர்:

    கோயம்பேடு மார்கெட்டுக்கு தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் தினசரி விற்பனைக்கு வருகிறது.

    கடந்த 3 வாரங்களாக அந்த பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி தோட்டங்கள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.

    இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினசரி 450 லாரிகள் வரை வந்து கொண்டிருந்த காய்கறிகளின் வரத்து திடீரென பாதியாக குறைந்துவிட்டது. தற்போது தினசரி 200 முதல் 250லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாகவே காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக தக்காளி விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது. இனி வரும் நாட்களில் கனமழை தொடரும் பட்சத்தில் காய்கறிகள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இன்று மொத்த விற்பனை கடைகளில் தக்காளி பெட்டி (14கிலோ) ரூ.1300க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.130க்கும், உஜாலா கத்தரிக்காய் ஓரு கிலோ ரூ.60க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.70க்கும், பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.60க்கும், அவரைக்காய் மற்றும் பாகற்காய் ஒரு கிலோ ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சில்லரை விற்பனை கடைகள் மற்றும் வெளி மார்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.100க்கும், கத்தரிக்காய், அவரைக்காய், பாகற்காய், ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பல வகையான காய்கறிகளை வீட்டுக்கு வாங்கி சென்று சமைப்பதை விட்டுவிட்டு தற்போது ஒன்று இரண்டு காய்கறிகளை மட்டுமே அதுவும் ¼ கிலோ, ½ கிலோ என குறைந்த அளவிலே வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×