search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜகண்ணப்பன்
    X
    அமைச்சர் ராஜகண்ணப்பன்

    2,500 புதிய பஸ்கள் வாங்க முடிவு- அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் முன்னிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் விநியோகம், சீரான குடிநீர் விநியோகம், காவிரி கூட்டு குடிநீர் விநியோகத் திட்ட பராமரிப்பு, வடகிழக்கு பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனா மற்றும் பருவமழைக்கால வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மின்சார விநியோகம், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

    பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்டத்தில் எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 42 இடங்கள் கண்டறியப்பட்டு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடரை எதிர்கொள்ள ஏதுவாக அனைத்து பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் தற்போது வரை மழை வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை. இருப்பினும் விழிப்புடன் பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கான போதிய உரம் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தன. உடனடி நடவடிக்கை மூலம் இன்று மாவட்டத்திற்கு 1,300 டன் அளவில் உரம் வர உள்ளன. இதனை அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்படும்.

    உரத்தட்டுப்பாடு என்ற வார்த்தைக்கே இடம் இல்லாத வகையில் இந்த அரசு செயல்படும்.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருகிற நிதியாண்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்.

    தமிழக போக்குவரத்து துறைக்கு புதிதாக 2,500 பஸ்கள் வாங்கப்பட உள்ளன. அவைகளில் 500 பஸ்கள் மின்னணு பஸ்களாகும். மேலும் பழுதான பஸ்களை சீரமைக்க நிதி உதவி கேட்டுள்ளோம். இன்னும் 2,3 மாதங்களுக்குள் அந்த பஸ்களை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×