search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 55 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் 24 மணி நேரமும் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளது. இதையடுத்து 2 அணைகளில் இருந்தும் 15 ஆயிரம் கன அடி உபரி நீர் தற்போது காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஒட்டிய பிலிகுண்டுலு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கேரிட்டி, நட்றாம்பாளையம் உள்பட பகுதிகளில் பெய்த கனமழையால் ஒனேக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது. இதனால் ஒனேக்கல்லுக்கு நேற்று முன்தினம் 45 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லு நடைபாதை மீது தண்ணீர் செல்வதால் நடைபாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 45 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 55 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டி உள்ளதால் கடந்த 14-ந் தேதி முதல் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

    இன்று காலையும் மேட்டூர் அணைக்கு வரும் 55 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. மேட்டூர் அணை கால்வாயில் நேற்று 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் 24 மணி நேரமும் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் இனி வரும் நாட்களிலும் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படும் என்பதால் காவிரியில் மேலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
    Next Story
    ×