search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழுவதும் நிரம்பிய நம்பியாறு அணை.
    X
    முழுவதும் நிரம்பிய நம்பியாறு அணை.

    வள்ளியூர் பகுதியில் தொடர் மழை- நம்பியாறு அணை நிரம்பியது

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பாபநாசம், சேர்வலாறு அணைகள், கொடுமுடியாறு அணை, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி அணைகள், குண்டாறு, அடவிநயினார் அணைகளில் தண்ணீர் நிரம்பும் நிலையை அடைந்தது.
    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 15 மில்லி மீட்டர் மழையும், கடனாநதி அணை பகுதியில் 6 மில்லி மீட்டர் மழையும், கொடுமுடியாறு அணை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

    தென்காசியில் 4.8 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழையும், கருப்பாநதி மற்றும் ராதாபுரம் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும், சேர்வலாறு சிவகிரி, செங்கோட்டை பகுதியில் தலா ஒரு மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. வள்ளியூர் அருகே உள்ள நம்பியாறு அணைக்கு முதலில் நீர் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நம்பியாறு மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், நம்பியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதன் காரணமாக விஜயன் தடுப்பணை நிரம்பி நம்பியாறு அணைக்கு தண்ணீர் வர தொடங்கியது. கடந்த 13-ந்தேதி நம்பியாறு அணை நீர்மட்டம் 12 அடியில் இருந்தது.

    இந்த நிலையில் நம்பியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நேற்று 21.84 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. நம்பியாறு அணை சிறிய அணை ஆகும். இதன் மொத்த நீர்மட்ட உயரமே 22.96 அடி ஆகும். இன்று காலை இந்த முழு அளவையும் எட்டி நீர் மட்டம் 22.96 அடியானது.

    இதைத்தொடர்ந்து அணை நிரம்பி தண்ணீர் வழிந்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொது மக்களும் நம்பியாறு அணை நிரம்பி வழிவதை ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பாபநாசம், சேர்வலாறு அணைகள், கொடுமுடியாறு அணை, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி அணைகள், குண்டாறு, அடவிநயினார் அணைகளில் தண்ணீர் நிரம்பும் நிலையை அடைந்தது.

    அணை பாதுகாப்புக்காக இந்த அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மணிமுத்தாறு அணையில் தற்போது தான் தண்ணீர் 90.10 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் மொத்த நீர்மட்டம் 118 அடி ஆகும்.ஆனால் 90 அடிக்கு பிறகு தான் பிரதானமாக விரிந்து காணப்படும். எனவே இதன் பிறகு நீர் மட்டம் மிகவும் குறைவாகவே உயரும். தற்போது வரை மணிமுத்தாறு அணையில் 53 சதவீதம் தண்ணீர் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்றொரு சிறிய அணையான வடக்கு பச்சையாறு அணைக்கு தற்போது தான் தண்ணீர் மிகவும் குறைந்த அளவு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஒரு அணை மட்டுமே நிரம்பாமல் தண்ணீர் மிகவும் குறைந்த அளவில் உள்ளது.

    வடக்கு பச்சையாறு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 50 அடி ஆகும். இந்த அணையில் தற்போது தான் 24.50 அடி நீர்மட்டம் உள்ளது. இது 22 சதவீத நீர் ஆகும். எனவே இந்த அணைக்கு மட்டுமே இன்னும் ஏராளமாக தண்ணீர் வரவேண்டியதுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து வெள்ளம் வடிந்து வருவதால், அனைத்து பகுதிகளிலும் விவசாய வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    Next Story
    ×