search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெய்யூர் தரைப்பாலம்
    X
    மெய்யூர் தரைப்பாலம்

    பூண்டி ஏரி திறப்பால் தரைப்பாலம் உடைந்தது- 10 கிராமங்கள் துண்டிப்பு

    கொசஸ்தலை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை தொடர்ந்து மீஞ்சூரை அடுத்த சீமாபுரம் ஊராட்சியில் உள்ள தடுப்பணையில் நீர் நிரம்பி அருவி போல் பாய்கிறது.
    பெரியபாளையம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெய்த பலத்த காரணமாக அம்மப்பள்ளி அணை நிரம்பியது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மப்பள்ளி அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு மழை நீருடன் சேர்ந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே பூண்டி ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது. தற்போது அம்மப்பள்ளி அணை மற்றும் மழை நீர் சேர்ந்து வருவதை தொடர்ந்து நேற்று முன்தினம் பூண்டி ஏரியில் இருந்து 2,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் - மொன்னவேடு பகுதியில் இருந்த தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

    பாலம் சேதம் அடைந்ததால் மெய்யூர், கல்பட்டு, ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் திருவள்ளூர் நோக்கி செல்ல மெய்யூர் - மொன்னவேடு தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

    தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தை சரிசெய்யும் பணி விரைவில் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொசஸ்தலை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை தொடர்ந்து மீஞ்சூரை அடுத்த சீமாபுரம் ஊராட்சியில் உள்ள தடுப்பணையில் நீர் நிரம்பி அருவி போல் பாய்கிறது. இதில் உல்லாச குளியல் போட கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் இந்த பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சீமாபுரம் தடுப்பணைக்கு வருபவர்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள். எனினும் ஏராளமானோர் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர் முன்பு நின்றபடி செல்போனில் செல்பி எடுத்து செல்கிறார்கள்.

    தற்போது மழை இல்லாததால் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    Next Story
    ×