search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழையால் மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு
    X
    தொடர் மழையால் மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு

    நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை- முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர்.
    கூடலூர்:

    நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளிமலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் மூலவைகையாற்றின் இரு கரையையும் தொட்டபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது. இதனால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் விடுக்கப்பட்டு பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 62.73 அடியாக உள்ளது. நீர்வரத்து 2669 கன அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1369 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் கேரள பகுதிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென பெய்த மழையால் நீர்வரத்து 3092 கன அடியில் இருந்து 5083 கன அடியாக உயர்ந்துள்ளது.

    அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2305 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கேரள பகுதிக்கு 584 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நேற்று மத்திய துணைக்குழுவினர் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.80 அடியாக உள்ளது. 53 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் 39 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 3.2, தேக்கடி 24, கூடலூர் 8.4, சண்முகாநதி அணை 31.5, உத்தமபாளையம் 12.2, வீரபாண்டி 20.4, வைகை அணை 3.4, மஞ்சளாறு 1, மருதாநதி 3.8, சோத்துப்பாறை 3, கொடைக்கானல் 8.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர்.

    போடி 1-வது வார்டு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கணவர் மனோகரன் உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் இருந்தார். காலை முதல் சாரல் மழை பெய்த நிலையில் சுவர் இடிந்து விழுந்து பொருட்கள் சேதம் ஆனது. ஆனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



    Next Story
    ×