search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களை வெள்ள நீர் மூழ்கடித்து செல்லும் காட்சி
    X
    தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களை வெள்ள நீர் மூழ்கடித்து செல்லும் காட்சி

    தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் புகுந்த மழை வெள்ளம்

    தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.
    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்த நிலையில் மாலையில் கனமழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

    இன்று காலையும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 184 மில்லி மீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 127 மில்லி மீட்டரும் பதிவானது.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் முடிவடையாததால் சாலைகளில் மழை நீர் தேங்கி சகதி காடாக காட்சி அளிக்கிறது. நேற்று கொட்டி தீர்த்த மழை காரணமாக பல்வேறு இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் தூத்துக்குடி ரெயில் நிலையத்திலும் தண்ணீர் புகுந்தது.

    இதனால் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியது. இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் முன்னதாக மேலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    அங்கு தூத்துக்குடி பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். வங்கக்கடலில் பலத்த காற்று வீசுவதால் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து 2-வது நாளாக மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அனைத்து விசைப்படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. மானாவாரி பயிர்கள் முளைக்கும் நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஸ்ரீவைகுண்டம்-184, ஓட்டப்பிடாரம்-127, தூத்துக்குடி-91.6, காயல்பட்டினம்-85, கடம்பூர்-76, கயத்தாறு, மணியாச்சி-75, வைப்பாறு-72, சாத்தான்குளம் -48.4, திருச்செந்தூர்-47, சூரங்குடி-42, கோவில் பட்டி-33, விளாத்திகுளம்-32, எட்டயபுரம்-31.2, வேடநத்தம்-20, குலசேகரப்பட்டினம்-19, காடல்குடி-12.

    Next Story
    ×