search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள்.
    X
    விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள்.

    அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் புரட்டாசி என்பதால் சந்தையில் ஆடுகள் எதிர்பார்த்த அளவு விற்பனை நடைபெறவில்லை.

    கடந்த வாரம் ஓரளவு ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் இன்று நடந்த சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. அதிகாலை முதலே ஆடுகளை வாங்குவதற்காக திண்டுக்கல், திருச்சி, கரூர், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

    குறைந்த பட்சமாக 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்கள் வாங்கி அதனை விற்பனை செய்ததால் அவர்களுக்கே லாபம் கிடைத்தது.

    விவசாயிகள் பலர் இதனால் ஆடுகளை விற்பனை செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இருந்தபோதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி வியாபாரிகள் ஏராளமானோர் ஆடுகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதே போல நாட்டுக்கோழி 1 கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனையானது.

    தாங்கள் எதிர்பார்த்த வகையில் ஆடுகள் கிடைத்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று மட்டும் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதே போல சந்தையில் சேவல்களும் அதிக அளவு விற்பனையாகின.

    தீபாவளி பண்டிகை நாட்களில் கிராமங்களில் சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம். இதற்காக பயிற்சி பெற்ற சேவல்களை இளைஞர்கள் சந்தையிலேயே போட்டியிட வைத்து வாங்கிச் சென்றனர். ரூ.3 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சேவல்கள் விற்பனையாகின.

    வழக்கமாக வியாழக்கிழமைகளில் மட்டுமே சந்தை நடைபெற்று வந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை சிறப்பு சந்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஆடுகள், கோழி உள்ளிட்டவை வாங்க முடியாத வியாபாரிகள் அன்றைய தினம் வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×