search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகைகள்
    X
    தங்க நகைகள்

    குரும்பூர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: நகை-பணத்துடன் தலைமறைவான அதிகாரிகள்

    கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணத்தை வைத்து அதிகாரிகள் பல இடங்களில் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    குரும்பூர்:

    கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை தொடர்ந்து வங்கி வாரியாக அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆய்வு செய்தபோது ரூ.2 கோடிக்கு மேலான நகை பொட்டலங்கள் மாயமாகி இருந்ததுடன், ஆண்டுக்கணக்கில் டெபாசிட் செய்த பணத்தை மோசடி செய்துவிட்டு அதற்கு போலியாக ஒரு டெபாசிட் ‘பாண்டை’ வாடிக்கையாளர்களிடம் கொடுத்துள்ளது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து வங்கியின் தலைவர் முருகேசப் பாண்டியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கூட்டுறவு சார்பதிவாளர் ஆழ்வார்குமார், செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்சி ஆகியோர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மோசடி தொடர்பாக வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வணிக குற்றவியல் புலனாய்வு பிரிவு போலீசார் மோசடி, நம்பிக்கை மோசடி, குற்றச் சதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கைது

    தொடர்ந்து கூட்டுறவு வங்கி சங்கத் தலைவர் முருகேசப் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

    வாடிக்கையாளர்களிடம் பெற்ற டெபாசிட் பணத்தை சினிமா பைனான்சியர்களுக்கு அதிக வட்டிக்கு கொடுத்துள்ளதும் கொரோனா காலத்தில் சினிமா தொழில் முடங்கியதால் படப்பிடிப்புகள் நடக்காததால் கொடுத்த பணம் திரும்ப வரவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் இவர்கள் வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணத்தை வைத்து பல இடங்களில் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கியதும் தெரியவந்தது.

    தலைமறைவாகி உள்ள வங்கியின் செயலாளர், துணைச்செயலாளரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களது வீடுகளுக்கு சென்றபோது முறைகேடாக சேர்த்த பணம், நகைகளுடன் தலைமறைவாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


    Next Story
    ×